» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! – 2 ஊழியர்கள் அதிரடி நீக்கம்!
வெள்ளி 29, மே 2026 3:24:38 PM (IST)
திருச்செந்தூர் கோயிலில் விரைவுத் தரிசனம் செய்யத் தன் உதவியாளருடன் மாறுவேடத்தில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம் வாங்கிய கோயில் அர்ச்சகர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களான காவலாளிகள் இருவர் உள்ளிட்ட 3 பேரை அறநிலையத்துறை செயலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சிறப்பு மற்றும் விரைவுத் தரிசனத்திற்காக வரும் சாதாரணப் பக்தர்களிடம் அங்கிருக்கும் சில ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஆயிரக்கணக்கில் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாகக் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தன.
இந்தப் புகார்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிய முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று (மே 29) அதிகாலை யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாகத் திருச்செந்தூருக்கு வருகை தந்தார். திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் காவல்துறை பிரமுகர்கள் எவருக்கும் எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல், தனது காரைக் கோயில் வளாகத்திற்கு வெளியே தூர நிறுத்தினார்.
பின்னர், யாரும் அடையாளம் காண முடியாதவாறு கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் முகக்கவசம் அணிந்து சாதாரணப் பக்தரைப் போலத் தனது உதவியாளருடன் கோயிலுக்குள் சென்றார். கோயிலின் உள்ளே சென்ற அமைச்சர், தனது உதவியாளரை அனுப்பி விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரிக்கக் கூறினார்.
அப்போது அங்கு நின்றவர்கள், வந்திருப்பது அமைச்சர் என்று சற்றும் அறியாமல், சண்முகவிலாச மண்டபத்தின் வாசல் வழியாக விரைவாக உள்ளே அழைத்துச் செல்லத் தலைக்கு ₹1,000 வீதம், அமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு ₹4,000 லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளனர்.
தன்னிடம் தற்போது கைவசம் ரொக்கப் பணம் இல்லை என்று கூறிய அமைச்சர், அங்கிருந்த அர்ச்சகரின் கூகுள் பே எண்ணிற்குத் தனது கைபேசி மூலம் ₹4,000 தொகையை உடனடியாக அனுப்பியுள்ளார். பணம் கணக்கில் ஏறியதை உறுதி செய்த அர்ச்சகரை, அமைச்சர் ரமேஷ் டிஜிட்டல் பரிவர்த்தனை ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்துத் தனது முகக்கவசத்தை அகற்றினார்.
வந்திருப்பது அமைச்சர் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த அர்ச்சகர் மற்றும் ஊழியர்களைத் திருக்கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அமைச்சர், அவர்களின் முறைகேடு குறித்த விளக்கக் கடிதத்தை எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார். இச்சம்பவத்தில் எவ்விதப் பாகுபாடும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, இம்முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டதாகக் கோயில் உள் பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர்களான காவலாளிகள் கருப்பசாமி, தோப்பு மற்றும் கோயில் அர்ச்சகர் ஐயப்பன் ஆகிய மூன்று பேரைப் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை செயலர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதில், அர்ச்சகர் ஐயப்பன் மறு உத்தரவு வரும் வரை திருக்கோயிலின் எந்தவொரு ஆன்மிக மற்றும் நிர்வாகச் சடங்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஊழியர்கள் நீக்கம்:
இதேபோல், கோயிலில் மொட்டை அடிக்கும் கல்யாண மண்டபப் பகுதியில் பக்தர்களிடம் கட்டாயப் பணம் வசூலில் ஈடுபட்டதாக எழுந்த தனிப் புகாரின் அடிப்படையில், முடியிறக்கும் தொழிலாளர்களான சங்கர் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் பணியிலிருந்து முழுமையாக விடுவித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சரே நேரடியாகக் களம் இறங்கி நடத்திய இந்த அதிரடி லஞ்ச ஒழிப்பு வேட்டை, தமிழக ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மில்லர்புரம் தூய பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன பண்டிகை: திரளான பொதுமக்கள் பங்கேற்பு!
வெள்ளி 29, மே 2026 9:45:16 PM (IST)

தூத்துக்குடியில் எபோலா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : ஆட்சியர் விஷு மகாஜன் ஆலோசனை!
வெள்ளி 29, மே 2026 9:04:43 PM (IST)

உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் : ஆட்சியர் விஷுமகாஜன் தகவல்!
வெள்ளி 29, மே 2026 5:30:53 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை அமோனியா ஆலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து!
வெள்ளி 29, மே 2026 4:42:45 PM (IST)

உடம்பில் மஞ்சள், சகதி பூசி நேர்த்திக்கடன்: கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு!
வெள்ளி 29, மே 2026 3:12:32 PM (IST)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக மேம்பாலப் பணியில் பாதுகாப்பு குறைபாடு: விபத்து அச்சத்தில் பொதுமக்கள்!
வெள்ளி 29, மே 2026 12:53:35 PM (IST)










