» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் கட்டுப்பாடுகளை மீறினால் 2 ஆண்டு சிறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:03:44 PM (IST)



வெளியூர் நபர்கள் இன்று மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். தேர்தல் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகளின்படி இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை விவரங்கள்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் விஷு மகாஜன் பேசியதாவது: இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், திரைப்படங்கள் அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் பிரச்சாரம் செய்யக் கூடாது. 

இசை கச்சேரிகள், நாடகங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். தொகுதியின் வாக்காளர் அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பிரச்சார அமைப்பாளர்கள் இன்று மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இதற்கான சோதனைகளை காவல்துறை தீவிரப்படுத்தும்.

தேர்தல் பரப்புரைக்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் ரத்து செய்யப்படுகின்றன. வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர், அவரது முகவர் மற்றும் கட்சிப் பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனம் மட்டுமே உரிய அனுமதியுடன் அனுமதிக்கப்படும். வாக்காளர்களை அழைத்து வர எவ்வித வாகனங்களையும் பயன்படுத்தக் கூடாது.

வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே தற்காலிக அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு குற்றப் பின்னணி இல்லாத 2 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற 3,642 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக ₹2.15 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory