» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல் பங்க்கில் ரகளை செய்த இருவர் கைது : போலீசார் நூதன தண்டனை!

வியாழன் 12, மார்ச் 2026 7:44:04 AM (IST)

சாத்தான்குளத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கி, இயந்திரத்தைச் சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களுக்குக் காவல் நிலையத்தில் திருக்குறள் படிக்க வைத்துப் போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கிற்கு, செவ்வாய்க்கிழமை அன்று ஒரே பைக்கில் மூன்று பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது ஊழியர் அமலதாஸ், பைக்கை இயந்திரத்திற்கு அருகில் கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ஊழியரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

ஊழியர் லாவகமாக விலகிக்கொள்ளவே, ஆத்திரத்தில் அவர்கள் தாக்கியதில் பெட்ரோல் இயந்திரத்தின் டிஸ்ப்ளே உடைந்து சேதமானது. பின்னர் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து, அதே கும்பல் சாத்தான்குளம் அமராவதி பத்தில் உள்ள சுடுகாட்டுத் தொழிலாளி சின்னத்துரை (47) என்பவரை வழிமறித்து, அவரைத் தாக்கி அவரிடமிருந்த ரூ. 2,000-த்தை பறித்துச் சென்றதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் சதீஷ்குமார் மற்றும் சின்னத்துரை ஆகியோர் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் தொடர்புடைய சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் மகன்  இசக்கி அழகுவேல் (25), அழகம்மன் கோயில் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் விஷ்வா (21) ஆகிய இருவரைப் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தங்கள் தவறை உணர்ந்து நல்வழிப்பட வேண்டும் என்ற நோக்கில், அவர்களைக் காவல் நிலையத்தில் திருக்குறள் வாசிக்க வைத்துப் போலீசார் நூதன முறையில் அறிவுரை வழங்கினர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலுவைராஜ் (34) என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory