» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 6:30 மணிக்கு திருமஞ்சனமும், நித்தியல் வழிபாடுகளும் நடைபெற்றன.
காலை 8:00 மணியளவில் நம்மாழ்வார் தோளுக்கினியானில் எழுந்தருளி வீதிப் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் முற்பகல் 10:30 மணிக்குச் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை மற்றும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சாற்றுமுறை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. வழிபாட்டிற்குப் பின் பக்தர்களுக்குத் தீர்த்தம், சடாரி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 5:00 மணிக்குச் சாயரட்சை வழிபாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை இரவு 7:30 மணியளவில் தொடங்கியது. உற்சவர் பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். சுவாமிகள் மாட வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வில் கோயில் நிர்வாக அதிகாரி சதீஷ், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் ஒன்பதாம் நாளான வரும் 6-ஆம் தேதி புகழ்பெற்ற தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளன. இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: மதுரை நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:50:52 AM (IST)

பெண் கொடூர கொலை: மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:44:34 AM (IST)










