» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

வியாழன் 26, பிப்ரவரி 2026 4:03:35 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளிக்கும் தீர்மானத்திற்கு, ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவு மதிப்பீடுகள் மற்றும் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டங்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. அப்போது, மாநகராட்சி பட்ஜெட்டைக் கண்டித்து அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவினர் வெளியேறிய பின், மாமன்றத்தில் 21 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அதில் 20-வது தீர்மானமாக, மாநகராட்சிக்குச் சொந்தமான "டோபிகானா" வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று கடைகளை, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை அமைக்க மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதைக் கேட்டதும் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில்: "ஏற்கனவே மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி கட்டிடத்திலேயே மதுக்கடைக்கு அனுமதி அளிப்பது சரியல்ல. கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று இந்தத் தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்," என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு தரப்பில் கட்டிடம் வாடகைக்குக் கேட்கும்போது நாம் தர முடியாது என்று சொல்ல முடியாது, எனக் குறிப்பிட்டார். மேயரின் இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பலரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

"ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தயவுசெய்து புதிய கடை அமைய அனுமதி வழங்காதீர்கள்," என்று மேயரிடம் கவுன்சிலர்கள் இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுத்தனர். ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அரசுத் திட்டத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது தூத்துக்குடி அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.


மக்கள் கருத்து

முட்டாள்Feb 26, 2026 - 07:13:52 PM | Posted IP 104.2*****

மக்கள் வாங்கும் 2000 ரூவா , 3000 ரூவா எல்லாம் டாஸ்மாக் பணத்தில் தான்

இது திராவிட அரசியல்வாதிகளின் பண தந்திரம்Feb 26, 2026 - 07:12:54 PM | Posted IP 162.1*****

சாராய ஆலைகள் எல்லாம் திராவிட குடும்பங்கள் இயக்கி வருகிறது அதை ஏன் அரசுடமை ஆக வில்லை?? வாங்கி விற்கிறது மட்டும் அரசு செய்யணுமா? அரசு ஏன் ஆலைகளை உருவாக்க முடியவில்லை? மதுபான ஆலைகளை ஏன் அரசு தயாரிக்க முடியாதா???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory