» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்; ஆட்சியில் பங்கு கோரிக்கை எடுபடாது: வைகோ

வெள்ளி 13, பிப்ரவரி 2026 7:50:12 AM (IST)

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் பங்கு கோரிக்கைகள் எடுபடாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: "கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அந்தந்தக் கட்சிகளின் உரிமை. ஆனால், மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இது போன்ற எந்தவித நிபந்தனைகளையும் விதித்தது இல்லை.

வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய கோரிக்கைகள் ஏற்கப்படாது. திமுகவின் ஈட்டி முனையாக மதிமுக என்றும் திகழும்." "மதிமுக சோர்வடைந்துவிடவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சியிலிருந்து மதுரை வரை 180 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டு பல லட்சம் மக்களைச் சந்தித்து வருகிறேன்.

அதேவேளையில், 'வந்தே மாதரம்' பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்தச் சந்திப்பின் போது, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கள் ஆர்.எஸ். ரமேஷ் (வடக்கு), ரஞ்சன் (தெற்கு), மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ஜி. ரமேஷ் மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக, கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியைச் சேர்ந்த நஸ்ரின் நிஷா என்பவர் வைகோவைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று காணாமல் போன தனது கணவர் பாபுவை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory