» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் முதல் கார்பன் சமநிலை துறைமுகமாக மாற்றம்!

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:38:35 AM (IST)

2026 மார்ச்சுக்குள் இந்தியாவின் முதல் கார்பன் சமநிலை (நியூட்ரல்) துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாற்றம் பெறுகிறது என்று துறைமுகத் தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தெரிவித்தார்.

‘பசுமை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து - நிலையான கடல்சார் எதிர்காலத்தை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலான மாநாடு, தூத்துக்குடி தனியார் விடுதியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் விஜயகுமார், வ.உ.சி. துறைமுகத் தலைவர் சுஷாந்த குமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அப்போது துறைமுகத் தலைவர் கூறியது: ரூ.35 கோடி மானியம் மூலமாக பசுமை மெத்தனால் பங்கரிங் வசதி உருவாக்கம் நடைபெற்று வருகிறது. அது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும். பசுமை மெத்தனால் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அதனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் கப்பல்கள், தூத்துக்குடி துறைமுகத்துக்கும், நாட்டில் பசுமை கப்பல் போக்குவரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு துறைமுகமான காண்ட்லா துறைமுகத்துக்கும் இடையே இயக்கப்படும்.

மேலும், நாட்டின் பசுமை ஹைட்ரஜன் மையங்களாக அறிவிக்கப்பட்ட மூன்று துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம், ஐந்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக துறைமுக வளாகத்தில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்ட உற்பத்தி 2029இல் தொடங்கும்.

துறைமுகத்தின் மின் தேவையில் பெரும்பாலான பகுதியை சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்உற்பத்தி மூலம் பூர்த்தி செய்துவரும் வ.உ.சி. துறைமுகம், இதனால் சுமார் 50 சதவீத பசுமை வாயுக்கள் உமிழ்வை குறைத்துள்ளது. மேலும், கூடுதலாக 6 மெகாவாட் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டால், 2026 மார்ச்சுக்குள் நாட்டின் முதல் கார்பன் சமநிலை துறைமுகமாக மாற்றம் பெறும் என துறைமுகத் தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

அப்படியாAug 4, 2025 - 09:29:53 AM | Posted IP 104.2*****

துறைமுகம் செல்லும் ரோட்டில் தினமும் அடிக்கடி லாரிகள் உள்ளே செல்லும்போது பயங்கர புகை மண்டலமாக இருக்கும் , அங்கங்கே தூசிகள், நிலக்கரி துகள்கள் காற்றில் கலந்து வருகிறது அதில் தூய்மையாம் . போங்கடா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory