» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொட்டலூரணியில் தேர்தல் புறக்கணிப்பு: பொதுமக்கள் அறிவிப்பால் பரபரப்பு

வெள்ளி 29, மார்ச் 2024 9:05:12 PM (IST)



பொட்டலூரணி கிராம மக்கள் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், தெய்வச்செயல்புரம் அருகில் உள்ளது பொட்டலூரணி கிராமம். இவ்வூரைச் சுற்றியுள்ள மானாவரி விவசாய நிலத்தில், எல்லை நாயக்கன்பட்டி வருவாய்க் கிராமத்திற்குட்பட்ட பொட்டலூரணி விலக்கில் என்.பி.எம் என்ற கழிவு மீன் நிறுவனமும், வடக்குக் காரசேரி வருவாய்க் கிராமத்திற்கு பொட்டலூரணி விவசாய நிலப் பகுதியில் மார்க்ஸ்மென், ஜெனிபா இண்டியா என்ற இரு கழிவு மீன் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. 

கழிவு மீன்களைக் கொண்டு உற்பத்தி செய்யும்போது வெளியேறும் புகையினால் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. விவசாய நிறுவனங்களில் நின்று வேலை செய்ய முடியவில்லை. நச்சுக் காற்றினைத் தேக்கிவைத்துக்கொண்டு இரவு நேரத்தில் திறந்துவிடுகிறார்கள். இதனால் ஆழ்ந்த தூக்கத்தின்போது மூச்சுமுட்டி எழவைக்கிறது. குழந்தைகளும் முதியவர்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். 

கழிவு மீன்களைக் கொண்டு உற்பத்தி செய்யும்போது வெளியேறும் கழிவு நீர், ஒருபுறம் மேற்படி நிறுவன வளாகத்திற்குள் மாபெருங் கிணறுகளாகத் தேக்கிவைப்படுகிறது. இந்த மாபெரும் கிணறுகளால் இப்பகுதியின் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மறுபுறம் அப்போதைக்கு அப்போது நடு இரவு நேரங்களில் டேங்கர் லாரிகளில் கழிவுநீரினைக் கொண்டுவந்து விவசாய நிலங்களிலும் ஓடைகளிலும் ஊற்றிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். நேரடியாக வெளியேற்றப்படும் கழிவு நீரும் ஓடைகளிலும் விவசாய நிலங்களிலும் கலந்து காணப்படுகின்றன.
 
இதுதொடர்பாக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, குடும்பநலத்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் எனத் தொடர்புடைய அனைவருக்கும் எங்கள் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மூன்று ஆண்டுகளாகப் பல முறை விண்ணப்பம் செய்துள்ளோம். மேற்படி நிறுவனங்களை மூடக்கோரி எங்கள் ஊர்ப் பொதுமக்கள் திரண்டுபோய் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக முழக்கமிட்டு ஆட்சியரிடம் விண்ணப்பமும் அளித்துள்ளோம். 

ஆர்ப்பாட்டம் நடத்த முதலில் ஒப்புக்கொண்ட காவல் துறை இறுதி நேரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான இசைவை மறுத்துவிட்டது. பொதுமக்களின் புகார் நிலுவையில் உள்ள நிலையில் பல மடங்கு மேற்படி நிறுவனங்கள் நாளும் நாளும் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. 

வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யவேண்டிய உரிய அரசு அலுவலர்கள் மாறாக நச்சு நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஆதரவாகவும் பொதுமக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர். சொந்த மண்ணின் மக்கள் மூச்சுத் திணறி வாழ வழியின்றித் தவிக்கும் நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுவரும் உரிய அரசு அலுவலர்கள் நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர்.

மக்களாட்சி நாட்டில் உரிமைகோரும் வாயில்கள் அனைத்தும் எங்களுக்கு மூடப்பட்டன. எனவே கழிவு மீன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் வரை தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது என எங்கள் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் வருகின்ற 2024 பாராளுமன்றப் பொதுத் தேர்தலைப் புறக்கணிக்கின்றோம் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory