» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருவிழாக்கள் விட்டுப்போன உறவுகளையும் நட்புகளையும் ஒன்று கூட வைக்கிறது!!

புதன் 5, ஏப்ரல் 2023 5:31:23 PM (IST)



பங்குனி மாதம் முதல் ஆடிமாதம் வரை கோவில் கொடை கொண்டாடப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற மக்கள் பொருளாதாரம் வசதியின்றி இருந்ததால் பல ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கொடைவிழா நடத்தினர். 

கிராம தேவதைகளுக்கு வழிபாடு செய்தால் விவசாயம் செழிக்கும், கால்நடைகள் அபிவிருத்தியாகும்,மக்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும், பேரிடரில் இருந்து இயற்கை நம்மை காக்கவும், விட்டுப் போன உறவுகள், நட்புகள் ஒன்று சேர்வது, உள்ளூரை சேர்ந்தவர்கள் பிழைப்பு தேடி பெருநகரங்கள், அன்னிய நாடுகளில் வசிப்போர் , உறவினர்கள் எனஅனைவரும் ஒன்றுகூடும் விழாவாக கோவில் கொடைவிழா கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழா ஒரு வார காலம் வரை நடைபெறுகிறது. அனைவரும் கூடி கலகலப்பாக ஒருவருக்கொருவர்அன்பு செலுத்துவதும், விருந்தோம்பல் செய்வதும், பல வருடங்களுக்கு பின் சந்தித்து கொள்ளுதலும் இதுபோன்ற நிகழ்வுகள் கோவில் கொடைவிழாக்களில் நடைபெறுகிறது. தவிர கடந்த காலங்களில் வீட்டிற்கு வரும் உறவுகளுக்கு அவரவர் இல்லங்களில் இல்லத்தரசிகள் சமையல் செய்து அசத்துவார்கள். 

இந்நிலையில் அத்தனை உறவுகளுக்கும் சமையல் செய்வதிலேயே நேரமாகிவிடுகிறபடியால் பெண்களால் உறவினர்கள், சொந்தபந்தங்களுடன் விழாக்களை அனுபவிக்கவோ கொண்டாடவோ முடிவதில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக அனைத்து கிராமங்களிலும் கோவில் கொடைவிழாக்கள் தொடங்கியது முதல்முடியும் நாட்கள் வரை அத்தனை நாட்களும் பொது சமையல் செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் விழாவை கண்டுகளிக்கின்றனர். 

இக்கோவில் கொடைவிழா நடைபெறுவதற்கு வீடுகள் தோறும் வரிவசூல் செய்யப்படுகிறது. தலைக்கட்டுவரி என்பது ஆண்கள் திருமணமாகி குடும்பஸ்தராகிவிட்டால் அவர்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. அக்காலத்தில் வசதியுள்ளவர்கள் வீடுகளில் திருமணமான ஆண்கள் குறைவாகவும், வசதியற்ற வீடுகளில் திருமணமான ஆண்கள் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் வரி கொடுக்க சிரமப்படுவார்கள் என்பதால் நிலபுலம் அடிப்படையில் வரி வசூல் செய்யப்பட்டது.

அதாவது நிலங்கள் அதிகம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரியும், நிலம் குறைவாக உள்ளவர்களுக்கு சொற்ப வரியும் வசூல் செய்தனர்.தவிர அக்கினிசட்டி, மாவிளக்கு, பொங்கலிடுவது, ஆடு கோழி பலி கொடுப்பது, நேர்த்திக் கடன்களான பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல், பறவை காவடி எடுத்தலும் அதன் பின் கும்மிபாட்டு, முளைப்பாரி ஊர்வலம் என முடிந்த பின்னர் ஒவ்வொரு நாள் இரவில் வசதிக்கு தருந்தவாறு பழமை மாறாத வில்லிசையில் மகாபாரதம், கர்ண மகாராஜா வரலாறு, கடலைமாடன் வரலாறு, மயான காண்டம், கண்ணகி கோவலன் கதையும் குறவன் குறத்தி ஆட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், பாட்டுக்கச்சேரி, ஆடல் பாடல், பட்டிமன்றம், பாட்டு மன்றம், இவையனைத்திற்கும் மேலாக இன்றுவரைநம்பிக்கையாகவும், உண்மை சம்பவமாகவும் பார்க்கப்படும் வீரத்தை பறைசாற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன், மலைபோல் சோதனைகள் வந்தாலும், ராஜ்யத்துக்கு ஆபத்து நேரிட்டாலும் ஒருபோதும் கொடுத்த வாக்கை தவற விடமாட்டேன், பொய்யுரைக்க மாட்டேன் எனும் சத்திய அரிச்சந்திரா நாடகம், மணவாழ்கையின் தத்துவத்தை கூறும் வள்ளி திருமணம் நாடகம், நளன் தமயந்தி நாடகம் போன்றவைகள். நடைபெறுகிறது. 

கடந்த 2019 கொரோனா பெருந்தொற்றுக்கு பின் இந்தாண்டு கோவில் கொடைவிழாக்களை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தவிர கோவில் கொடைவிழாவிற்கு முக்கியமானதாக விளங்கும் நையாண்டி மேளத்திற்கும், ஒலிபெருக்கிக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தவிர கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கும் கடும் கிராக்கியாக உள்ளது. இதனால் கிராமிய கலைஞர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தற்போது குழந்தைக்கு முழு ஆண்டு விடுமுறை என்பதால் மே முதல் வாரம் முதல் ஜூன் மாதம் வரை ஒரே சமயத்தில் கொடைவிழா நடைபெறுகிறது. 

தவிர கடந்த சில ஆண்டுகளாக ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றிருந்ததை இந்தாண்டு முதல் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அந்தந்த காவல் நிலையங்களே எந்தவொரு நிகழ்ச்சிக்கும் சட்டம் ஒழுங்கை கருதி அனுமதி அளிக்கலாம் என நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து கிராமிய கலைஞர்கள் வரவேற்றுள்ளனர். இதனால் இந்தாண்டு கிராம கோவில் கொடைவிழா களைகட்டத்தொடங்கி உள்ளன. ஜாதி, மத உணர்வுகளை புண்படுத்தும் நிகழ்ச்சிகள் தவிர்த்து அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தப்பட்ட காவல் துறைஅனுமதி வழங்கவும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும் வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் வரதராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory