» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய வங்கிக்கு வட்டியுடன் ரூ.100 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

புதன் 24, ஜூன் 2026 11:57:40 AM (IST)

இந்திய வங்கியிடம் வாங்கிய கடனை, அதற்கான வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 100 கோடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நகை வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வைர நகை வியாபாரி நீரவ் மோடி, கடந்த 2012-ஆம் ஆண்டில் துபாயில் உள்ள தனது 'ஃபயர்ஸ்டார் டைமண்ட் எப்இசட்இ' என்ற நிறுவனத்திற்காக இந்திய வங்கியிடம் (Indian Bank) சுமார் ரூ.38.9 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அதைத் தனிப்பட்ட முறையில் தானே செலுத்துவதாக நீரவ் மோடி உத்தரவாதப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

கடந்த 2018-இல் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடிப் புகார் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இந்திய வங்கி தனது கடனைத் திரும்பக் கோரியது. ஆனால், நீரவ் மோடியோ அல்லது அவரது நிறுவனமோ பணத்தைச் செலுத்தாததால், லண்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையின் போது, தான் இந்தியாவில் இல்லாததால் வங்கி அனுப்பிய கடன் மறுசீரமைப்பு அறிவிப்புகள் தனக்குக் கிடைக்கவில்லை என நீரவ் மோடி வாதிட்டார். ஆனால், அவர் அடைக்கப்பட்டுள்ள லண்டன் சிறைக்கும் அவரது வழக்கறிஞர்களுக்கும் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவரது வாதத்தை முற்றிலும் நிராகரித்தது.

நீரவ் மோடியிடம் முறையான சட்டப்பூர்வ பாதுகாப்பு வாதங்கள் எதுவும் இல்லாததால், அசல் கடன் தொகையான ரூ.38.9 கோடியுடன் வட்டியையும் சேர்த்து மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேலான தொகையை இந்திய வங்கிக்குச் செலுத்த வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory