» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா மீதான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு!

சனி 21, பிப்ரவரி 2026 4:21:22 PM (IST)



அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு முறையற்றது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மாற்றுச் சட்டப் பிரிவின் கீழ் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை 10% ஆக நிர்ணயித்து வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்’ (IEEPA) கீழ், பரஸ்பர வரி விதிப்பு முறையை அமல்படுத்தினார். இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு கடும் வரி விதிப்புகளை அவர் மேற்கொண்டார். குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக, இந்தியா மீதான வரியை 50% ஆக உயர்த்தினார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இவ்வாறு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து, ‘லேர்னிங் ரிசோர்சஸ்’ (Learning Resources) மற்றும் ‘வி.ஓ.எஸ் செலக்ஷன்ஸ்’ (VOS Selections) ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, "வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது; IEEPA சட்டம் அதிபருக்கு வரி விதிக்க அனுமதி அளிக்கவில்லை" என்று அதிரடித் தீர்ப்பளித்தது.
ட்ரம்பின் புதிய நகர்வு

நீதிமன்றத் தீர்ப்பால் பழைய வரிகள் ரத்தான நிலையில், ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ், 150 நாட்களுக்கு தற்காலிகமாக வரி விதிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளுக்கான வரியை 10% ஆக அவர் நிர்ணயித்துள்ளார்.
இந்தியா குறித்த ட்ரம்பின் கருத்து

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வரி விதிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளிக்கையில்:  "இதில் எதுவும் மாறப்போவதில்லை. அவர்கள் வரி செலுத்துவார்கள், நாங்கள் செலுத்த மாட்டோம். இது முன்பு இருந்த நிலைக்கு நேர்மாறானது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர், புத்திசாலி. இப்போது இந்தியாவுடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரி செலுத்துகிறார்கள், ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன."

மேலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்துப் பேசுகையில், "இந்தியாவுடனான எனது உறவு அற்புதமானது. எனது வேண்டுகோளை ஏற்று ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது. உக்ரைன் போரைத் தீர்க்க நாங்கள் விரும்புவதால் அவர்கள் பின்வாங்கினர்," என்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை விளக்கம்:  இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நாடுகளுக்குமான தற்காலிக வரி 10% ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த வரிச் சலுகை இந்தியாவுக்கும் பொருந்தும்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory