» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” - ஒபாமா ஆதரவு
வெள்ளி 26, ஜூலை 2024 5:16:46 PM (IST)
"கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசுபொருளானது. அதேநேரம், பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று, "அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என ஒபாமா எண்ணவில்லை. கமலா ஹாரிஸ் இந்தப் போட்டியில் வெல்ல முடியாது. இதனால் ஒபாமா அதிருப்தியில் இருக்கிறார்" என்று சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது பராக் ஒபாமா மற்றும் அவரின் மனைவி மிட்சேல் ஒபாமா இருவரும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருவரும் ஒன்றாக கமலா ஹாரிஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பராக் ஒபாமா, "இந்த வார தொடக்கத்தில், மிட்சேலும், நானும் எங்கள் தோழி கமலா ஹாரிஸை அழைத்து எங்கள் ஆதரவினை தெரிவித்தோம். கமலா அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்று நாங்கள் நினைக்கிறோம். அவருக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அமெரிக்கா இக்கட்டாக இருக்கும் இந்த தருணத்தில், கமலா வெற்றிபெற, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதையை துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார். இருப்பினும் இரண்டு முறை அமெரிக்க அதிபராக பணியாற்றிய பராக் ஒபாமா கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்படலாம் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.