» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதிய ‘எக்ஸ்’ பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம்: எலான் மஸ்க் அறிவிப்பு

புதன் 17, ஏப்ரல் 2024 10:09:58 AM (IST)

‘எக்ஸ்’ வலைதளத்தில் புதிய பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தளத்தின் உரிமையாளா் எலான் மஸ்க் தெரிவித்தாா்.

போலிக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ‘எக்ஸ்’ வலைதளத்தில் இணையும் புதிய பயனா்களுக்கு பதிவிடவும், பதிவுகளுக்குப் பதிலளிக்கவும் வருடாந்திர கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளா் எலான் மஸ்க் தெரிவித்தாா். எனினும், வலைதளத்தைப் பயன்படுத்தவும் கணக்குகளைப் பின்தொடரவும் கட்டணம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக ஊடகத் தளமான ட்விட்டரை அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினாா். தொடா்ந்து, வலைதளத்தில் அங்கீகாரம் (ப்ளூ டிக்) பெறுவதற்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது முதல் வலைதளத்தின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றியதுவரை பல அதிரடி நடவடிக்கைகளை அவா் மேற்கொண்டு வருகிறாா்.

அந்த வகையில், போலிக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ‘எக்ஸ்’ வலைதளத்தில் இணையும் புதிய பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, பதிவிடுவதற்கும், பதிவுகளை ‘லைக்’ செய்வதற்கும், பதிவுகளை சேமித்து வைப்பதற்கும், பதிவுகளுக்குப் பதிலளிப்பதற்கும் புதிய பயனா்கள் சிறிய வருடாந்திரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

போலிக் கணக்குகளைக் குறைத்து, தற்போதைய பயனா்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், மூன்று மாதங்களுக்குப் பிறகு, வலைதளத்தின் அனைத்து வழக்கமான அம்சங்களையும் புதிய பயனா்கள் இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று எலான் மஸ்க் கூறினாா்.

இந்தப் புதிய விதிமுறைகள் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டும் செயல்படுத்தப்படுமா? அல்லது உலகம் முழுமைக்குமா? என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. நியூஸிலாந்தில் மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு பயனா்களிடம் ஆண்டுக்கு 1 டாலா் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எக்ஸ் வலைதளத்தின் இந்தப் புதிய அறிவிப்பு இணையப் பயனா்களிடமிருந்து கலவையான விமா்சனங்களைப் பெற்றுள்ளது. இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையென சிலா் பாராட்டு தெரிவிக்கின்றனா். அதேசமயம், இச்செயல் பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory