» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் மீது பதிலடி தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடாது: ஜோ பைடன் திட்டவட்டம்!

திங்கள் 15, ஏப்ரல் 2024 5:39:18 PM (IST)

"ஈரான் மீது எந்த விதமான பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடாது" என்று அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 90 சதவீத டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்க படை உதவியுடன் நடுவானில் தடுத்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

சில ஏவுகணைகள் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்தது. இதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டதே தவிர உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இஸ்ரேல் மீது முதன் முதலாக ஈரான் இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது.இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை தொடரும் எண்ணம் இல்லை என ஈரான் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் முகமது ஹூசைன் பகோரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகாரி கூறினார். இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ஈரான் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஈரான் நாட்டின் மீது எந்த விதமான பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும், பதில் நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தால் கவனத்துடன் இருக்குமாறும் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் கூறினார். ஜி -7 நாடுகளின் தலைவர்களுடன் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஜி 7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜோ பைடன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் இன்று குறைந்தது. இதையடுத்து இஸ்ரேலில் இன்று இயல்பு வாழ்க்கை திரும்பியது. பள்ளிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் இந்த பிரச்சனையை இரு நாடுகளும் தூதரகம் மூலம் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் டெல் அவிவ் நகருக்கு ஏர் - இந்தியா விமான சேவை தற்காலிமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory