» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாக்., பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்: கூட்டணி அரசு அமைக்க ஒப்பந்தம்!!
புதன் 21, பிப்ரவரி 2024 10:52:05 AM (IST)
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப்பை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவாகி உள்ளது.
பொருளாதார சரிவால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ந்தேதி பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆனால் அதன் முடிவில், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
இந்த சூழலில், இரண்டு வாரங்கள் ஆகியும், அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் அதிக அளவில் (92 இடங்கள்) வெற்றி பெற்றனர். எனினும், அவர்கள் ஆட்சியமைக்க முடியாத சூழலே உள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி (79 இடங்கள்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (54 இடங்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால், பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலில், நாட்டில் ஒரு வலிமையான அரசை அமைப்பதற்கான முயற்சியில் அந்த இரு கட்சிகளும் இறங்கின. கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. அதில் பலன் கிடைத்துள்ளது.
கூட்டணி அரசி அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி.) முக்கிய தலைவரான ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார். இரு கட்சிகளின் தலைவர்களும் அரசை அமைப்பதற்காக மீண்டும் கைகோர்க்க முடிவு செய்து, அதனை உறுதி செய்துள்ளனர். தேசத்தின் சிறந்த நலனுக்காக, என கூறி அவர்கள் கூட்டணி அரசை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனால், முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் (வயது 72) புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபரான சர்தாரி (வயது 68) நாட்டின் புதிய அதிபராகவும் வரக்கூடும். அதற்கேற்ப இருவரையும் அதற்கான வேட்பாளராக பிலாவல் பூட்டோ உறுதிப்படுத்தி உள்ளார். முதல் நாளில் இருந்து பிலாவல் தலைமையிலான கட்சி, மந்திரி பதவி எதனையும் கேட்கவில்லை என்று ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
சர்தாரி, 2008 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். இதனால், இரு கட்சிகளும் கூட்டணி அரசை அமைத்து பொருளாதார பாதிப்பில் சிக்கி தவிக்கும் நாட்டை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.