» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் இஸ்லாமியா்களுக்கு மீண்டும் தடை: டிரம்ப் வாக்குறுதி: அதிபா் மாளிகை கண்டனம்!

திங்கள் 30, அக்டோபர் 2023 10:48:43 AM (IST)

அமெரிக்காவில் இஸ்லாமியா்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளதற்கு அதிபா் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபராக தான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமிய நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட பயணத் தடை மீண்டும் கொண்டுவரப்படும் என அந்நாட்டு முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். இஸ்லாமியா்களுக்கு எதிரான டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு அமெரிக்க அதிபா் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, யேமன், இராக், சூடான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. தற்போதைய அதிபா் ஜோ பைடன் அந்தத் தடையை நீக்கினாா்.

இந்நிலையில், குடியரசுக் கட்சியின் யூதக் கூட்டமைப்பின் ஆண்டு உச்சிமாநாட்டில் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்றுப் பேசுகையில், ‘இஸ்லாமியா்களுக்கு எதிரான பயணத் தடை உங்களுக்கு நினைவிருக்கிா? நான் 2-ஆவது முறை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் முதல் நாளில், அந்தப் பயணத் தடையை மீண்டும் கொண்டு வருவேன்.

நமது நாட்டைக் கெடுக்கும் எண்ணம் கொண்ட மக்கள் நம் நாட்டுக்கு வருவதை விரும்பாததால், பயணத் தடையை நாங்கள் கொண்டுவந்தோம். அது மாபெரும் வெற்றியாகும். நமது நாட்டிலிருந்து கெட்டவா்களை வெளியேற்றியதால் 4 ஆண்டுகளில் எந்தவொரு அசாம்பவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இஸ்ரேலியா்களுடன் அமெரிக்கா்கள் துணை நிற்கிறோம். உங்கள் கவலைகளை நாங்கள் பகிா்ந்து கொள்கிறோம். ஜோ பைடனின் பலவீனம் நமது நாட்டை நாசமாக்கிவிடும் என்ற அச்சத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கருக்கும் இந்த உறுதிமொழியை நான் அளிக்கிறேன். உங்களின் அடுத்த அதிபராக, வலிமையின் மூலம் அமைதியை மீட்டெடுத்து, 3-ஆம் உலகப் போரை நான் தடுப்பேன்’ என்றாா்.

அதிபா் மாளிகை கண்டனம்: 

டொனால்ட் டிரம்ப் கருத்து தொடா்பாக அமெரிக்க அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் ஆண்ட்ரூ பேட்ஸ் கூறுகையில், ‘இஸ்லாமியா்கள் என்றாலே ஆபத்தானவா்கள் என்ற கருத்தைப் பரப்புவது ஒரு ‘பேரழிவு நோய்’ என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த 2020-ஆம் ஆண்டு தெரிவித்தாா். மேலும், டிரம்ப் கொண்டுவந்த அமெரிக்கா்கள் அல்லாத இஸ்லாமியா்களுக்கான பயணத் தடையை நீக்கியதில் பெருமிதம் கொண்டாா்.

வெறுப்புக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். அரபு அமெரிக்கா்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிரான இந்த அவமானகரமான தாக்குதல்கள் நமது நாட்டின் நிலைப்பாட்டுக்கு எதிரானவையாகும். இதை அனைத்து அமெரிக்கா்களும் கண்டிக்க வேண்டும். இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்களின் அதிகரிப்பு நமது தேசத் தன்மையின் மீதான நேரடித் தாக்குதல்’ என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory