» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டத்தில் ரூ.1,914 கோடி ஊழல்: 47 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
புதன் 21, செப்டம்பர் 2022 9:01:42 PM (IST)
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தில் ரூ.1,914 கோடி ஊழல் தொடர்பாக 47 பேர் மீது எப்பிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அமெரிக்காவின் வடக்கு மாநிலமான மினசோட்டாவில் கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக புதிய நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை தனியார் அமைப்பு மூலம் செயல்படுத்துவதாகும். இதற்காக அமெரிக்க அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தது. குழந்தை ஊட்டச்சத்து திட்டத்தின் ஸ்பான்சராக இருந்த தனியார் நிறுவனம் ஒன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டத்தில் 240 மில்லியன் டாலர் (ரூ.1,914 கோடி) மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதையடுத்து இவ்விவகாரம் குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ விசாரணை நடத்தியது. இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறுகையில், ‘குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தில் 47 பேருக்கு தொடர்புள்ளது. குந்தைகளின் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி தவறான விலைப்பட்டியல், உணவு விநியோகம் செய்துள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர். இதன் மூலம் கிடைத்த வருமானத்தைப் பயன்படுத்தி மினசோட்டாவில் உள்ள சொகுசு வாகனங்கள், குடியிருப்பு மற்றும் வணிக ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளனர்’ என்றார்.