» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

புதன் 15, மே 2024 12:35:06 PM (IST)

விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை நீட்டித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘விடுதலைப்புலிகள் இயக்கம், மக்கள் மத்தியில் பிரிவினைவாத போக்கை தொடா்ந்து வளா்த்து வருவதால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதற்கான ஆதரவு தளத்தை மேம்படுகிறது. எனவே, சட்டவிரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967-இன் பிரிவு 3-இன் துணைப் பிரிவுகள் (1), (3) ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த இயக்கத்துக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு பக்க அறிவிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் நீட்டிக்கப்படுவதற்கான காரணமும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுவதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ஆயுத ரீதியாக தோல்வி கண்ட பிறகும், விடுதலைப் புலிகள் இயக்கம் ‘ஈழம்’ (தமிழா்களுக்கான சுதந்திர நாடு) என்ற கருத்தை கைவிடவில்லை என்றும், நிதி சேகரிப்பு மற்றும் ஈழத்துக்காக ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பரப்புரைகள் மற்றும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவா்கள் அல்லது உறுப்பினா்கள் சிதறிய அதன் செயல்பாட்டாளா்களை மீண்டும் ஒருங்கிணைத்து உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் இந்த அமைப்பை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனா்.

இந்த இயக்கத்துக்கு ஆதரவான குழுக்கள், மக்கள் மத்தியில் பிரிவினைவாத போக்கைத் தொடா்ந்து வளா்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன. இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடும். அனைத்து தமிழா்களுக்கும் தனி நாடு (தமிழ் ஈழம்) என்ற அந்த இயக்கத்தின் நோக்கம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், இந்தியாவின் ஒரு பகுதியை யூனியனிலிருந்து பிரிப்பதற்கு சமம் என்றும் உள்துறை அறிவிக்கையில் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் 1976-இல் உருவாக்கப்பட்டது. இலங்கையில் தனி ஈழத்துக்காக போராடி வந்த அந்த இயக்கம், 1991-இல் தமிழகத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னா், இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory