» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

வியாழன் 15, பிப்ரவரி 2024 4:46:18 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் இறுதி விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனத்திற்கு உட்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த ஆலை அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுவதாக 2018ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று (பிப்.14) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், "அரசின் உத்தரவுகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளைப் பலமுறை மீறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில், ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். தூத்துக்குடி சிப்காட்டில் 67 நிறுவனங்கள் உள்ளது. இதில், 27 நிறுவனங்கள் அபாயம் நிறைந்ததாக (Red Category) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், 2018ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த தாமிர உற்பத்தியில் 36 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உற்பத்தி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவிக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாகச் செயல்படுகிறதா என்ற ஆய்வு நடத்தாமல் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாடு அரசும், ஸ்டெர்லைட் ஆலை ஒப்புக் கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையைத் திறப்பதா, இல்லை வேண்டாமா என்பது தொடர்பாக முடிவுகள் செய்யலாம் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

விசாரணையின்போது, கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory