» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் பத்திர முறை ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வியாழன் 15, பிப்ரவரி 2024 11:42:15 AM (IST)

தேர்தல் நிதி பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அமல்படுத்தியது. 

அந்த திட்டத்தின் மூலம், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1 முதல் ஒரு கோடி வரை பணத்தை செலுத்தி, தேர்தல் நிதி பத்திரத்தைப் பெற்று, அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். ஒரு நிறுவனம் எத்தனை தேர்தல் பத்திரங்கள் வேண்டுமானாலும் பெறலாம். அந்த பத்திரத்தில் எந்தக் கட்சியின் பெயரும் இடம்பெறாது. அந்த பத்திரத்தைக் கொடுப்பவரின் பெயரும் இடம்பெறாது.

அரசியலில் கருப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.இந்த திட்டத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை அரசியல் கட்சிகள் பெற்றன. பாஜக அதிகளவிலான நன்கொடையை பெற்றது.எனினும், இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளின் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: "தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது. அரசியல் சாசன பிரிவு 19(1) மீறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது.

தேர்தல் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை உடனடியாக பாரத ஸ்டேட் வங்கி நிறுத்த வேண்டும். தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-க்குல் சமர்பிக்க வேண்டும். அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.”

அதன்பிறகு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையை மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர். மேலும், தேர்தல் பத்திரத்துக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory