» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்தது : புத்தாண்டு நாளில் புதிய சாதனை

செவ்வாய் 2, ஜனவரி 2024 8:25:13 AM (IST)

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எக்ஸ்போசாட் செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி- 58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து, அதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அத்துடன், நிலவு மற்றும் சூரியன் குறித்து ஆய்வு செய்வதற்காக விண்கலங்களை விண்ணில் செலுத்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

தற்போது, சூப்பர்நோவா (விண்மீன் வெடிப்பு) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களை தொடங்கியுள்ளது. அதன்படி, நடப்பாண்டு தொடக்கத்திலேயே `எக்ஸ்ரே போலாரி மீட்டர் சேட்டிலைட்' என்பதன் சுருக்கமான `எக்ஸ்போசாட்' என்னும் 469 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டன.

இந்த திட்டத்துக்காக நேற்று முன்தினம் காலை 8.10 மணிக்கு தொடங்கிய 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக் கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.- சி58 ராக்கெட் நேற்று காலை 9.10 மணிக்கு தீ பிளம்பை கக்கியபடி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் புறப்பட்ட 21 நிமிடங்களில் முதன்மை செயற்கைகோளை பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் திட்டமிட்ட புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. உடனடியாக, கட்டுப்பாட்டு அறையில் கூடியிருந்த விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் பி.எஸ்.எல்.வி- டிஎல் என்ற நவீன ரகத்தில் அனுப்பப்படும் 4-வது ராக்கெட்டாகும். 4 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரமும், 260.1 டன் எடையும் கொண்டது. இதில் உள்ள முதன்மை செயற்கைகோளான ‘எக்ஸ்போசாட்' கிழக்கு நோக்கி குறைந்த சாய்வான சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டு உள்ளது.

விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள் 469 கிலோ எடையும், 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தையும் கொண்டது. அதிநவீன எக்ஸ் - ரே கருவிகள், வானியலில் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடுவது, நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் உட்பட, 50 ஆதாரங்களை ஆய்வு செய்ய உள்ளது. குறிப்பாக, விண்வெளியில் உள்ள கருந்துளைகளில் இருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து, இந்த விண்வெளியை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்வதற்கான தரவுகளை இந்த செயற்கைகோள் அளிக்கும்.

பூமியின் மேற்பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்வதற்காக, கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்' என்ற செயற்கைகோளும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த செயற்கைகோளும் திட்டமிட்ட இலக்கில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. பெண்கள் மேற்பார்வையில் உருவான முதல் செயற்கைகோள் என்ற பெருமையை இந்த செயற்கைகோள் பெற்று உள்ளது. இத்துடன் சில வெளிநாட்டு செயற்கைகோள்கள் என மொத்தம் 12 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது விஞ்ஞானிகளுக்கு 2024-ம் ஆண்டு ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. 

ராக்கெட் ஏவப்பட்ட இந்த நிகழ்வு விண்வெளித் துறைக்கு ஒரு அற்புதமான செய்தியாகும். இது விண்வெளித்துறையில் இந்தியாவின் திறமையை மேலும் மேம்படுத்தும். இந்தியாவை முன்னோடி இல்லாத உயரத்திற்கு எடுத்துச் செல்லும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் என கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory