» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

வியாழன் 7, டிசம்பர் 2023 12:03:20 PM (IST)

‘மிக்ஜம்’ புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழகத்தில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.

இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர்.பாலு இன்று வழங்கினார். அப்போது தொலைபேசியில் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இதனிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory