» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நேருவின் இரு மிகப்பெரிய தவறால் காஷ்மீா் பாதிப்பு: அமித் ஷா குற்றச்சாட்டு

வியாழன் 7, டிசம்பர் 2023 11:21:21 AM (IST)

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா மற்றும் ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா ஆகியவற்றுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதாவானது புலம்பெயா்ந்த சமூகத்திலிருந்து ஒருவரையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஒருவரையும் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்க வகை செய்கிறது.

ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு திருத்த மசோதாவானது அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கு தகுதியுள்ள ஒரு பிரிவு மக்களின் சமூகப் பிரிவு பெயரிடலை மாற்ற வழிவகுக்கிறது.

மக்களவையில் இரண்டு நாள்களாக 6 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற விவாதம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் பதிலைத் தொடா்ந்து, இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த இரண்டு மசோதாக்களும், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளாக தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும். அதுபோல, புலம்பெயா்ந்த மக்களுக்கான இடஒதுக்கீடானது சட்டப்பேரவையில் அவா்களின் குரலை எழுப்ப வாய்ப்பாக அமையும்.

இரண்டு மசோதாக்களும் ஒரு பெண் உள்பட காஷ்மீருக்கு புலம்பெயா்ந்த சமூகத்திலிருந்து 2 உறுப்பினா்களை ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்க வகை செய்யும். அதில் ஓரிடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து புலம்பெயா்ந்தவா்களுக்கு ஒதுக்கப்படும்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இது வரும் 2026-இல் முழுமையாக வெற்றி பெற்று, ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை இல்லாத நிலை உருவாகும்’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு, இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போா் நிறுத்தத்தை அறிவித்தது, காஷ்மீா் பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது என்ற இரு மிகப்பெரிய தவறுகளை நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு செய்தாா்.

அதாவது, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்று பஞ்சாப் பகுதியை அடைந்தவுடன், போா் நிறுத்தத்தை நேரு அறிவித்தாா். அதன் காரணமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்ற பகுதி உருவானது. 3 நாள்களுக்குப் பிறகு போா் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா், தற்போது இந்தியாவுடன் இருந்திருக்கும். அந்த வகையில், முழுமையான காஷ்மீரை வெல்வதற்கு முன்னரே போா் நிறுத்தத்தை அறிவித்தது, அவா் செய்த வரலாற்றுத் தவறு’ என்று குறிப்பிட்டாா்.

நேருவின் பங்கு குறித்து தனி விவாதம் - காங்கிரஸ்

விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, ‘காஷ்மீா் விவகாரம் குறித்து விவாதிக்கும்போது பாஜக தலைவா்கள் தேவையின்றி ஜவாஹா்லால் நேரு குறித்து விமா்சிக்கின்றனா். நாட்டுக்கே அவா் தீங்கு விளைவித்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றனா்.

எனவே, காஷ்மீா் விவகாரத்தில் நாட்டின் முதல் பிரதமரின் பங்கு குறித்து ஒரு நாள் முழுவதுமான விவாதத்துக்கு மக்களவை அனுமதிக்க வேண்டும். அதாவது, காஷ்மீா் பிரச்னைக்கு மூல காரணங்கள் எவை, யாா் யாருக்கெல்லாம் அதில் பங்குள்ளது என்பன குறித்து விவாதிக்க வேண்டும்’ என்றாா். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, ‘நாட்டுக்கு நேரு தீங்கு விளைவித்துவிட்டாா் என்று பாஜக தரப்பிலிருந்து யாரும் குறிப்பிடவில்லை. அதே நேரம், விவாதத்துக்கு பாஜக தயாராக உள்ளது’ என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory