தூத்துக்குடியின் வரலாறு (6 of 10)

தூத்துக்குடி நகர வளர்ச்சி

தூத்துக்குடி புரட்சிகரமாக வளர்ச்சியடைந்ததால், அதை ஓரு முனிசிபல் நகரமாக உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1866ம் வருடம் நவம்பர் 1ம் தேதியில் தூத்துக்குடி முனிசிபாலிட்டி ஸ்தாபிக்கப்பட்டது. 1870ம் ஆண்டு ஒரு சிறு மருத்துவ நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
 
1883ல் சேசு சபை குருக்கள், புனித சவேரியார் கல்வி நிலையத்தை தொடங்கினார்கள். அதே ஆண்டில் எஸ்.பி.ஜீ.மிஷனை சேர்ந்தவர்கள் கால்டுவெல் பள்ளியை ஸ்தாபித்தனர். கால்டுவெல்லின் தொடர்பாக இறை இயல் கற்றுக்கொடுக்க சாயர்புரத்தில் டாக்டர் ஜி.யு.போப் ஓர் கல்லூரி பிரிவை அமைத்தார்.
 
திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்றத்தின் வேலைப் பளுவை குறைக்க தூத்துக்குடியில் 1873ல் ஒரு உபநீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1876-ல் தூத்துக்குடிக்கும் மணியாச்சிக்கும் ரயில் பாதை தொடர்பு, மாவட்ட உள் பகுதிக்கெல்லாம் ரோடுகள் தூத்துக்குடியுடன் இணைக்கப்பட்டன.

தூத்துக்குடி துறைமுகத்தின் திட்டமிட்ட வளர்ச்சி


1842ம் ஆண்டுதான் தூத்துக்குடி துறைமுகம் ஆங்கிலேயரால் முதன்முதலில் ஆய்வு (சர்வே) நடத்தப்பட்டது. அதன் பிறகுதான் திட்டமிட்ட வளர்ச்சி பணி மேற்க்கொள்ளப்பட்டது. 1866ல் முதல் வளர்ச்சி நிகழ்ச்சியாக ஒரு சிறு அலைதாங்கி (Jetty) 1200 ரூபாயில் கட்டப்பட்டது. அது கடலுக்குள்ளே ஒரு 100 அடி நீளமுள்ள மரப்பலகையால் செய்யப்பட்ட ஓர் அமைப்பு.
 
1873ல் அந்த அலை தாங்கியை மீண்டும் நீளப்படுத்தி பலப்படுத்தினார்கள். 1877ல் பிரிட்டிஸ் இளவரசர் "பக்கிங்ஹாம் பிரபு" தூத்துக்குடிக்கு விஜயம் செய்தபொழுது தூத்துக்குடி ஆங்கில வியாபாரிகள் அவரை சந்தித்து அந்த சிறிய பழைய துறைமுகத்தை நவீனமாக்க விண்ணப்பித்தனர். அவரும் ஆவண செய்வதாக வாக்குறுதியளித்தார். 1881ல் அவர் வாக்குறுதி செயல்படுத்தப்பட்டது.
 
அலைதாங்கி இன்னும் பலப்படுத்தப்பட்டு, 1887ல் அதன் அகலம் இரண்டு மடங்காக ஆக்கப்பட்டது. அதே வருடத்தில் (1887) தூத்துக்குடி ரயில் நிலையத்தோடு அதை இணைத்து "டிராலி" என்னும் ஓரு் இலேசான ரயில் தண்டவாளங்கள் வழி ஓடும் வசதி செய்யப்பட்டது. 1894ம் ஆண்டு இரும்பு கம்பிகளின்மேல் கட்டப்பட்ட ஒரு புதிய அலைதாங்கி அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது.
 
கடல் வானிபம் தீவிரமாக வளரவே கடற்கரையின் முன்பாகத்தையெல்லாம் தரையாக மாற்றி, புதிய அலைதாங்கிக்கு போக்குவரத்து மார்க்கங்கள் போடப்பட்டன. இந்த புதிய அமைப்புகளுக்காக 2லட்சம் ரூபாய் செலவு செய்யபட்டன. 1895ம் வருடம் ஜூலை மாதம் 13ம் தேதி மாற்றமடைந்த புதிய அலைதாங்கி துறைமுக பணிகளுக்காக திருக்கப்பட்டன. 1899ல் தென் இந்திய இருப்புபாதை துறைமுக மேடை வரை விரிவாக்கப்பட்டது.


Favorite tagsThoothukudi Business Directory