» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை

வியாழன் 16, மார்ச் 2023 5:31:40 PM (IST)

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாசாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த போது, "திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். 

இதனை மீறி வைக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"  என்று கட்சித் தலைவர்  13-9-2019 அன்று அறிக்கை வெளியிட்டார்.  இந்த அறிக்கை வெளிவந்த நாள்முதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெரும்பாலோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்காமல், கட்சித் தலைவர் அவர்களின் ஆணையை பின்பற்றி வந்தனர்.  இதற்கு மாறாக, பேனர் வைத்த கட்சி நிர்வாகிகள் சிலர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது.

ஆனால், தற்போது ஒரு சிலர்,  தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி முன்னோடிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பதாக கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்சிப் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும்; பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் - மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில்   வைக்கக் கூடாது என்று கட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு  அறிவிக்கிறேன்.

இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக கட்சித் தலைமை கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; கட்சித் தலைமை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியிருக்கிறார்.


மக்கள் கருத்து

அது எப்படி ?Mar 16, 2023 - 08:45:31 PM | Posted IP 162.1*****

முரட்டு திமுகக்காரங்க நம்பவா போறாங்க?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory