» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

எய்தவர்களை விட்டுவிட்டு அம்பு மீது நடவடிக்கை? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி!

சனி 22, அக்டோபர் 2022 12:16:09 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை குறித்து தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அருணா கெஜதீசன் ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, மக்கள் தப்பி ஓடும்போதும் அவர்களை போலீசார் குறிவைத்து சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் திருமலை, சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூன்று பேரும்ம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி லிங்கத் திருமாறனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தூத்துக்குடி கலவரம் வருத்தத்துக்குரியது. போராட்டக்காரர்களுடன் வன்முறை கும்பலும் நுழைந்துவிட்டது. வன்முறையாளர்களை கையாளுவது மிகவும் சிரமமான விசயம். அரசு அதிகாரிகள் சிரமப்பட்டு கையாளுகின்றனர். துப்பாக்கிச்சூடு வரை சென்று இருக்க வேண்டுமா என்பது பலருடைய கருத்து எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் தான் நடக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுடச் சொல்லி உத்தரவு வந்து உள்ளது. இதில் தண்டனைக்குரியவர்கள் அரசாங்கத்திலிருந்து உத்தரவு தந்தவர்களா அல்லது அந்த உத்தரவை நிறைவேற்றியவர்களா என்பதை பற்றி பொதுவாக சிந்தித்து பார்க்க வேண்டும்.
தண்டனைக்குரியவர்கள் யார்?

துப்பாக்கிச்சூடு தவறு என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் சுட்டவர்கள் அவர்களாகச் சுடவில்லை. அரசாங்கம் சொல்லி சுட்டுள்ளார்கள். இன்றைக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் நாளைக்கு அரசாங்கம் சொன்னால் செவிகொடுக்க வேண்டாம் என்று கூறுவதாக அர்த்தமாகும். விசாரணை செய்த நீதிபதி அதையும் யோசித்து இருக்க வேண்டும்.
யார் செய்தது குற்றம்?

குற்றம் அரசாங்கத்துடையது. அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களின் குற்றமே ஒழிய அவர்களின் உத்தரவை நிறைவேற்ற தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற சிக்கலான விஷயத்தை தமிழக முதலமைச்சர் மீண்டும் நல்ல முறையில் பரிசீலிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கும் தேவை, மனிதாபிமானமும் தேவை.

ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்தவர்களை விட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. அம்பு, எய்தவர்கள் எந்த இலக்கை நோக்கி எய்கிறார்களோ அதை நோக்கியே செல்லும். அதற்கு வழங்கப்பட்ட உத்தரவும் கடமையும் அது தான். எங்கோ நெருடல் இருக்கிறது. அரசாங்கம் நன்றாக யோசிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory