» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நகைக் கடன் தள்ளுபடி தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திங்கள் 7, மார்ச் 2022 11:51:36 AM (IST)

5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும், 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த, இப்போதைய முதலமைச்சரும், அவரது மகனும் மேடைதோறும் பேசினார்கள். 

அவர்களின் பேச்சை நம்பி சுமார் 48 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார்கள். ஆனால், இந்த அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் நகைக் கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது. இந்தப் புதிய நிபந்தனைகளின்படி சுமார் 35 லட்சத்து 38 ஆயிரம் நபர்கள் நகைக் கடன் தள்ளுபடிக்கான தகுதியினைப் பெறவில்லை என்றும், சுமார் 13 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது.

இதனை அடுத்து, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை இந்த அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அப்பணத்தைத் தராமல், அந்தந்த சங்கங்களில் உள்ள வைப்பு நிதியினை, நகைக் கடன் தள்ளுபடிக்கும், அன்றாட பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியதாகச் செய்திகள் கூறுகின்றன.

இதனால், தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்கள் உரம், விதை போன்ற விவசாயக் கடன்கள் வழங்குதல், அவசர கால நகைக் கடன் வழங்குதல், முதிர்ச்சியடைந்த வைப்பு நிதிக்கான தொகையினை உரியவருக்கு வழங்குதல் போன்ற அன்றாடப் பணிகளுக்குக் கூட போதிய நிதி இல்லாமல் திண்டாடி வருகின்றன. நிதி இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கும், கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் தேவையற்ற சச்சரவுகள், வீண் விவாதங்கள் எழுந்தன. கூட்டுறவு கடன் சங்கங்களே இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியது.

எனவே, சங்க அலுவலர்கள் நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக வழங்கக் கோரி இந்த அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை இந்த அரசு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை.

ஐந்து பவுன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்த சுமார் 4,450 கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, அச்சங்கங்கள் தள்ளுபடி செய்த தொகையினை உடனடியாக வழங்கவும், மேலும் அச்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

JAYA THONDARKALMar 9, 2022 - 04:01:11 PM | Posted IP 162.1*****

Mr.EPS சிறந்த மனிதர் & சிறந்த நிர்வாகி.அதிமுக தொண்டர்கள் அவருக்கு முழு ஆதரவை கொடுங்கள் , OPS + his sleeper cell ஐ கழட்டிவிடுங்கள். EPS அவர்கள்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory