» சினிமா » செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பயிலகம்: சென்னை உள்பட 14 இடங்களில் தொடக்கம்

ஞாயிறு 16, ஜூலை 2023 10:12:09 AM (IST)

காமராஜர் பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை உள்பட 14 இடங்களில் பயிலகம் நேற்று தொடங்கப்பட்டது.

சினிமா தாண்டி அரசியலிலும் தடம் பதிக்க விஜய் தயாராகி வருகிறார். தனது ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்ற செயல்பாடுகளில் நிர்வாகிகளை எழுச்சியுடன் ஈடுபட வைத்து வருகிறார், விஜய். சமீபத்தில் கூட 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்தார்.

இதற்கிடையில் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை சீர்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்தநாளில் தமிழகத்தில் இரவு நேர பாடசாலைகள் தொடங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படிப்பகங்களுக்கான ஆசிரியர் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை வியாசர்பாடி முத்தமிழ்நகரில் ‘விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு நேர படிப்பகம் நேற்று மாலை திறக்கப்பட்டது. இதனை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள், கல்வி உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பையும் வழங்கினார். இந்த விழாவில் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது ‘இந்த இரவு நேர படிப்பகத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது. நல்லமுறையில் இந்த படிப்பகத்தை பயன்படுத்தி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதிக்க வேண்டும்', என்று மாணவ-மாணவிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து புஸ்சி ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் அறிவுறுத்தலின்பேரில், காமராஜர் பிறந்தநாளான இன்று (நேற்று) தமிழகத்தில் இரவு நேர படிப்பகங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி சென்னையில் படிப்பகத்தை திறந்து வைத்துள்ளோம். அதேபோல கன்னியாகுமரியில் 4 இடங்கள், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 இடங்கள், கோவை, திருச்சி, சேலத்தில் தலா ஒரு இடம் என தமிழகத்தில் 14 இடங்களில் இரவு நேர படிப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கூடுமானவரை பெண்களையே ஆசிரியர்களாக நியமித்திருக்கிறோம். தற்போது மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கிறார்கள். மாணவர்கள் வருகைக்கு ஏற்றவாறு உரிய வசதிகள் செய்து தரப்படும். இந்த படிப்பகம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை செய்வது, பாடங்களில் சந்தேகங்கள் நிவர்த்தி செய்வது போன்ற கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்த படிப்பகத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆசிரியர்களிடம் உரிய விளக்கங்களும் பெறலாம்.

தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதர வகுப்பு மாணவர்களும் வரும் பட்சத்தில் அதற்கேற்ற தகுதியான ஆசிரியர்கள் உடனுக்குடன் நியமிக்கப்படுவார்கள். மக்கள் இயக்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களுமே கல்வி தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆசிரியர் பற்றியோ அல்லது இதர தேவைகள் இருந்தாலோ இந்த பெட்டியில் கடிதம் எழுதி போடலாம். உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு புஸ்சி ஆனந்த் கூறினார்.


மக்கள் கருத்து

MGR RASIGARKALJul 16, 2023 - 03:13:17 PM | Posted IP 172.7*****

விஜய் அரசியலுக்கு லாயக்கில்லை . இவர் தாய் தந்தையை மதிக்க மாட்டார்..ஏழைகளுக்கு உதவமாட்டார். தனது சொத்துக்களை காப்பாற்றவே அரசியல் நுழைவு....இவர் ஒரு கிறிஸ்தவ போதகர் சப்போர்ட்டர். ஆகவே இவர் ஒருவேளை அரசியலில் வந்தால் கிறிஸ்தவ மக்கள் ஓட்டுக்கள் ஓரளவு திமுகவிடம் இருந்து இவருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory