» சினிமா » செய்திகள்

தமிழில் படம் தயாரிக்க காரணம் என்ன? எம்எஸ் தோனி - சாக்ஷி விளக்கம்!

புதன் 12, ஜூலை 2023 11:59:25 AM (IST)



"தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. தமிழகம் என்னை தத்தெடுத்துள்ளது” என எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தோனி, "நான் இப்படத்தைப் பார்த்து விட்டேன். இது மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. நான் என் மகளோடு அமர்ந்து இப்படத்தைப் பார்த்தேன். அவளுக்கும் படம் பிடித்திருக்கிறது. இது ஒரு ஜாலியான திரைப்படம். மொத்தத்தில் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எனக்கு என் தயாரிப்பு அணியை பார்க்கும் போது பலம் வருவது போல் உணர்கிறேன். 

எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் சென்னையில் தான். நான் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். நினைத்துப் பார்த்து சந்தோஷப்படும் பல சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. மேலும், தமிழ்நாடு என்னை தத்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நாங்கள் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு பின்னர் சாம்பியன் ஆனது மறக்க முடியாத தருணம்.

நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது. இதெல்லாம் தான் இப்படத்தை தமிழில் தயாரிக்க காரணம். இப்படம் வெகு சீக்கிரத்தில் வெளியாக இருக்கிறது. மிகவும் ஜாலியான திரைப்படமாக இது இருக்கும். மூன்று நபர்களுக்கு இடையேயான சமன்பாடு தான் இத்திரைப்படம். அம்மா மற்றும் மனைவிக்கு நடுவில் சாண்ட்விச் போல் மாட்டிக் கொண்டவர் தான் மகன். இதைத்தான் இப்படம் கலகலப்பாக பேசுகிறது” என்றார்.

சாக்‌ஷி தோனி பேசுகையில், "இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் மற்றும் எங்களுக்கு தெரிந்த பல பேரின் வாழ்க்கையில் இப்படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்கிறது. அப்பொழுது தான் தோன்றியது ஏன் இதை ஒரு படமாக எடுக்கக்கூடாது என்று. இப்படித் தான் இப்படம் உருவானது.

இதனை தமிழில் எடுப்பதற்கு மிக முக்கியக் காரணம் என் கணவர் தோனி தான். நாங்கள் எல்லோருமே தமிழில் படத் தயாரிப்பு தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தோம். ஏனென்றால் முதல்முறையாக படத் தயாரிப்பில் இறங்கும் போது ஒரு மிகப்பெரிய சப்போர்ட் வேண்டும். இது போன்ற ஒரு சிறப்பான துவக்கத்திற்கு சென்னை சரியான இடமாக இருக்கும் என்று தோன்றியது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory