» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கே.எல்.ராகுல், டிகாக் அபாரம் : சென்னை அணியை வீழ்த்தியது லக்னோ!!

சனி 20, ஏப்ரல் 2024 11:11:32 AM (IST)சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 34-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் சிஎஸ்கே அணியின் ஓப்பனராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 2-வது ஓவரிலேயே டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 4-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வெளியேறினார். 

6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 51 ரன்களைச் சேர்த்தது. ஓரளவுக்கு ஆடிய அஜிங்க்ய ரஹானேவை 9-வது ஓவரில் போல்டாக்கினார் கிருணல் பாண்டியா. 36 ரன்களில் ரஹானே அவுட். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 1 ரன்கள் என அவுட்டாக தடுமாறிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை சேர்த்தது.

ஸ்கோரை ஏற்றும் முயற்சியில் மொயின் அலி 18-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினாலும் அதற்கு அடுத்த பந்தே 30 ரன்களில் விக்கெட்டானார். மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஜடேஜாவுடன் 7-வது விக்கெட்டுக்கு கைகோத்தார் தோனி. அவர் விளாசிய 2 சிக்சர்ஸால் அரங்கமே உற்சாகமடைந்தது. 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 176 ரன்களைச் சேர்த்தது. ஜடேஜா 57 ரன்களுடனும், தோனி 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணி தரப்பில், கிருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாயினிஸ், மொஹ்சின் கான், யஷ் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ராகுலும், டிகாக்கும். 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் டிகாக் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராகுல், அப்படியே அதனை தொடர்ந்தார்.

53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார் ராகுல். பதிரனா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். ஜடேஜா அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். கடைசி 2 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19-வது ஓவரில் வெற்றிக்கு தேவைப்பட்ட அந்த ரன்களை எடுத்தது லக்னோ. அதன் மூலம் 6 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory