» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் மூலம் வங்கதேசத்துக்கு எந்த பயனும் கிடையாது : பிசிபி தலைவர் ஜலால் யூனுஸ்

வியாழன் 18, ஏப்ரல் 2024 12:26:00 PM (IST)

ஐபிஎல் மூலம் ரகுமான் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை... அதனால் வங்காளதேசத்துக்கு எந்த பயனும் கிடையாது" என்று பிசிபி தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார். .

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் வங்காளதேச வீரரான முஸ்தாபிசுர் ரகுமான் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர், சென்னை அணி தரப்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளராக உள்ளார்.

இந்த நிலையில் முஸ்தாபிசுர் ரகுமான் மே ஒன்றாம் தேதியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வங்காளதேசம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. எனவே அதில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 30-ம் தேதியுடன் நாடு திரும்புங்கள் என்று அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இருப்பினும் சி.எஸ்.கே. நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் அவருக்கு மே ஒன்றாம் தேதி பஞ்சாப்புக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடுவதற்கு மட்டும் வங்காளதேச வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே விசா சம்பந்தமாக அவர் ஒரு போட்டியை தவற விட்டிருந்தார். தற்போது 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் முழு ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என்பது சி.எஸ்.கே. அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மறுபுறம் ஜிம்பாப்பேவுக்கு எதிராக முஸ்தாபிசுர் விளையாடி என்ன செய்யப் போகிறார்? ஐ.பி.எல். தொடரில் தோனி போன்ற மகத்தான வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை விட டி20 உலகக்கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இருக்குமா? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் ரகுமான் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என வங்காளதேச வாரியத்தின் செயல்பாடுகள் தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார். வேண்டுமானால் அவரிடமிருந்து மற்ற சி.எஸ்.கே. வீரர்கள் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"முஸ்தாபிசுரின் பிட்னஸ்தான் எங்களுடைய கவலையாகும். அவர் 100 சதவீதம் பிட்டாக இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். சி.எஸ்.கே. அணிக்கு அவருடைய பிட்னஸ் பற்றி எந்த கவலையும் கிடையாது. ஆனால் நாங்கள் கவலைப்பட வேண்டும். அதனால்தான் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்காக மட்டுமல்லாமல் அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவும் நாடு திரும்புமாறு கூறியுள்ளோம்.

ஆனால் ஐ.பி.எல். தொடரில் இருந்தால் அது நடக்காது. ஐ.பி.எல். தொடரில் விளையாடி அவர் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கற்றுக்கொள்ளும் காலங்கள் முடிந்து விட்டன. வேண்டுமானால் அவரிடமிருந்து ஐ.பி.எல். தொடரில் நிறைய வீரர்கள் கற்றுக் கொள்ளலாம். அதனால் வங்காளதேசத்துக்கு எந்த பயனும் கிடையாது" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory