» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் அதிரடி: பெங்களூரு அணியை வீழ்த்தியது மும்பை|

வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:03:42 AM (IST)



சூர்யகுமார் அதிரடி அரைசதம் உதவியுடன், 197 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி, பெங்களூரு அணியை வீழ்த்தியது மும்பை அணி.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். சிறப்பான ஃபார்மில் விளையாடி வந்த விராட் கோலி இன்றையப் போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க டு பிளெஸ்ஸி மற்றும் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பின் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் மற்றும் மஹிபால் லோம்ரோர் 0 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் டு பிளெஸ்ஸி 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 19 பந்துகளில் 4 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 52 ரன்களை அதிரடியாய் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ரோகித் சர்மா 38 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

சூர்யகுமார் யாதவ் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 16 ரன்களும், ஹர்திக் பாண்டியா 21 ரன்களும் சேர்த்தனர். 15.3 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory