» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த குஜராத்!
வியாழன் 11, ஏப்ரல் 2024 12:41:45 PM (IST)
ஐபிஎல் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணில் நேற்று வென்றது.
முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்களை எடுத்து வென்றது.கடைசி ஓவரில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் போட்டி முடிவுக்கு பிறகு பேசியதாவது:
கடைசி பந்தில்தான் நாங்கள் தோற்றோம் (எங்கு தோற்றோம் என்ற கேள்விக்கு?). இப்போது இது குறித்து பேசுவது கடினமாக இருக்கிறது. போட்டியில் எங்கு தோற்றோம் என்பதைக் கூறுவதுதான் கேப்டனின் கடினமான வேலையாக நினைக்கிறேன். உணர்ச்சிகள் குறைந்த பிறகு எங்கு தோற்றோம் என தெளிவாகக் கூறுகிறேன். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வாழ்த்துகளை சொல்லியாக வேண்டும். இதுதான் தொடரின் அழகான விசயம். இதில் இருந்து கற்றுகொண்டு முன்னேற வேண்டும்.
நான் பேட்டிங் விளையாடும்போது 180 போதுமானதாக நினைத்தேன். 196 என்பது வெற்றிக்கான இலக்காக நினைக்கிறேன். ஈரப்பதம் இல்லாத நிலையில் இதை எங்களது பௌலர்கள் செய்திருக்க வேண்டும். ஜெய்பூரில் 197 என்பது எப்போதும் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டியதுதான் எனக் கூறினார்.
போட்டி முடிந்த பிறகு எங்கு தோல்வியடைந்தோம் என கேப்டன்கள் விளக்கம் சொல்லுவது ஒரு வழக்கமான நடவடிக்கை. ஆனால், இது குறித்து இதுவரை யாரும் இந்த எதார்த்தமான பதில் சொல்லியதில்லை. அதனால் இது இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலர் சாம்சனின் கேப்டன்சியை விமர்சித்தும் வருகிறார்கள். 5 போட்டிகளில் முதல் தோவியை சந்தித்துள்ளது ராஜஸ்தான். இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.