» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதன்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!

சனி 2, டிசம்பர் 2023 4:31:06 PM (IST)தங்கள் சொந்த மண்ணில் முதன்முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. 

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அடுத்ததாக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி சைலட் நகரில் நவம்பர் 28ம் தேதி துவங்கியது. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் ஜாய் 86 ரன்களும், நஜ்முல் சாண்டோ 37 ரன்களும் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளும் கெயில் ஜமிசன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு வங்கதேச பவுலர்கள் மிகப்பெரிய சவாலை கொடுத்த போதிலும், அதை சமாளித்த நியூசிலாந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 104, கிளன் பிலிப்ஸ் 42 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதன் பின் 7 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் 2வது இன்னிங்ஸை துவக்கிய வங்கதேசம் முன்பை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 338 ரன்கள் சேர்த்து அசத்தியது. அதிகபட்சமாக நஜ்மல் சான்டோ 105, முஸ்பிகர் ரஹீம் 67 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக அஜஸ் பட்டேல் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இறுதியில் 332 ரன்களை துரத்திய நியூசிலாந்து சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் டாம் லாதம் 0, டேவோன் கான்வே 22, கேன் வில்லியம்சன் 11, ஹென்றி நிக்கோலஸ் 2, கிளன் பிலிப்ஸ் 12, டாம் ப்ளெண்டல் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 58, கேப்டன் டிம் சௌதீ 34 ரன்கள் எடுத்தும் 181 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டிய வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் 2வது முறையாக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் இந்த வெற்றியால் 12 புள்ளிகளை 100% விகிதத்தில் பெற்றுள்ள வங்கதேசம் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவைப் பின்னுக்கு (66.67%) தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory