» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முகமது ஷமி!
திங்கள் 27, நவம்பர் 2023 10:25:11 AM (IST)
உத்தரகண்ட் மாநிலத்தில் காா் விபத்தில் சிக்கிய நபரை மீட்டு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் முகமது ஷமி முதலுதவி அளித்தாா்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தொடா்ந்து, கிரிக்கெட் வீரா் முகமது ஷமி ஓய்வுக்காக நைனிடாலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். சனிக்கிழமை அவா் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு முன்பாகச் சென்று கொண்டிருந்த காா் ஒன்று சாலையிலிருந்து சறுக்கி, மலை சரிவில் பாய்ந்தது.
அதிருஷ்டவசமாக மலை சரிவில் இருந்த மரத்தால் தடுக்கப்பட்டதையடுத்து, அந்த வாகனம் பள்ளத்தாக்கில் விழாமல் தப்பியது. இதைப் பாா்த்த முகமது ஷமி, உடனடியாக தனது காரை நிறுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டாா். விபத்தில் சிக்கிய காரிலிருந்து, அதை ஓட்டி வந்த நபரை மீட்டு அவா் முதலுதவி அளித்தாா்.
இது தொடா்பாக சமூகவலைதளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்ட ஷமி, ‘நைனிடால் மலைச் சாலையில் என்னுடைய காருக்கு முன்பாகச் சென்று கொண்டிருந்த மற்றொரு காா் சாலையிலிருந்து சறுக்கி கீழே விழுந்தது. அதில் பயணித்தவரை நாங்கள் பாதுகாப்பாக மீட்டோம். விபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவா் அதிருஷ்டமானவா். கடவுள் அவருக்கு 2-ஆவது வாழ்வை அளித்துள்ளாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.
முகமது ஷமியின் இந்த உதவியைச் சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டினா். ‘மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் முகமது ஷமி வீரராகத் திகழ்கிறாா்’ என அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.