» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அறிவிப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 10:28:22 AM (IST)
ஆஸ்திரேலிய அணியின் டி 20 கிரிக்கெட் கேப்டன் ஆரோன் பின்ச் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான ஆரோன் பின்ச் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக கடந்த ஆண்டு, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேவேளையில் டி 20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்தார். இவர், தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2021-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதன் முறையாக சாம்பியன் பட்டம்வென்றது. ஆனால் சொந்த மண்ணில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறத் தவறியது.
ஓய்வு குறித்து ஆரோன் பின்ச் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது; 2024-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரைஎன்னால் விளையாட முடியாது என்பதை உணர்கிறேன். அணியின்நலன் கருதி, இதுவே நான் ஓய்வைஅறிவிப்பதற்கான சரியான தருணம். அணி நிர்வாகம் புதிய கேப்டனை நியமித்து, டி20 உலககோப்பைக்கு என்று திட்டங்களை வகுக்க இதுதான் சரியான நேரம்.
12 வருடங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியதையும், சில தலைசிறந்த வீரர்களுடன் விளையாடியதையும் என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.முதல் முறையாக டி 20 உலகக்கோப்பையை வென்ற தருணத்தையும், 2015-ல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையை வென்ற தருணத்தையும் என்னால் என்றும் மறக்கவே முடியாது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் என்னை தொடர்ந்து ஆதரித்த எனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆரோன் பின்ச், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்காக டி 20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார் ஆரோன் பின்ச். அவர், 103 சர்வதேச டி 20கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34.28 சராசரியுடன், இரு சதங்கள், 19 அரை சதங்களுடன் 3,120 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 142.53 ஆகும். 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பின்ச் 76 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 172 ரன்கள் விளாசியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.