» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மிஸ்ரா மாயாஜாலம்: மும்பையை வீழ்த்தி 2வது இடத்திற்கு முன்னேறியது டெல்லி!!

புதன் 21, ஏப்ரல் 2021 12:10:36 PM (IST)மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய மிஸ்ரா, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியினால் சென்னை அணியைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது டெல்லி அணி. ஆர்சிபி அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இப்போட்டியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, தனது முதல் ஓவரில் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார். பந்துகளை ஸ்லாட்டில் போட்டதால் பேட்ஸ்மேன்கள் அசால்ட்டாக பவுண்டரி விளாசினார்கள். இதனால், மிஸ்ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அடுத்து இரண்டாவது ஓவரை வீச வந்தார். முதல் மூன்று பந்துகளைச் சொதப்பலாக வீசி 6 ரன்களை விட்டுக்கொடுத்து, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டெம்ப் திசையில் வீசி, கொஞ்சம் பவுன்சரையும் சேர்த்தார்.

இதனை அடித்து ஆட முற்பட்ட ரோஹித் ஷர்மா, பவுன்சரை சரியாகக் கணிக்காமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். மிஸ்ராவின் மாயாஜாலம் அதோடு நின்றுவிடவில்லை. அதே ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ஹார்திக் பாண்டியாவை கோல்டன்-டக் ஆக்கி மிரட்டினார். மூன்று பந்துகளில் இரண்டு முக்கிய விக்கெட்களை பறிகொடுத்ததால் மும்பை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. தனது மூன்றாவது ஓவரில் கூக்ளியை அதிகம் பயன்படுத்தினார்.

இதனை கணிக்க திணறிய பொல்லார்ட் 2 ரன்கள் மட்டும் அடித்து வெளியேறினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. தனது கடைசி ஓவரில், நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த இஷான் கிஷனை 26 (28) போல்ட் ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், மும்பை அணி 150 ரன்களை கூட எட்டமுடியவல்ல. மிஸ்ரா மொத்தம் 10 பந்துகளில்ரோஹித், ஹார்திக், பொல்லார்ட் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்களை கைப்பற்றியதுதான் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் இவர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியதால், ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

புள்ளிகள் பட்டியல்

வரிசை அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
1. பெங்களூர் 3 3 0 6 +0.750
2. தில்லி 4 3 1 6 +0.426
3. சென்னை 3 2 1 4 +1.194
4. மும்பை 4 2 2 4 +0.187
5. கொல்கத்தா 3 1 2 2 -0.633
6. ராஜஸ்தான் 3 1 2 2 -0.719
7. பஞ்சாப் 3 1 2 2 -0.967
8. ஹைதராபாத் 3 0 3 0 -0.483


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir Products

Thoothukudi Business Directory