» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?
திங்கள் 28, நவம்பர் 2022 10:57:27 AM (IST)
தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம்.
தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அவர்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இரு வழிகளில் செய்யலாம். ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளம். மற்றொன்று மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் முதல் சிறப்பு முகாம்கள்.
தமிழ்நாடு மின் வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் (www.tangedco.gov.in) ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதி உள்ளது. இணையதளத்தில் ஏற்கெனவே கைப்பேசி எண்ணை பதிவு செய்யாவிட்டால், அந்த இணையதளத்திலேயே வசதி உள்ளது. மின் இணைப்பு எண்ணைக் குறிப்பிட்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்யலாம்.
கைப்பேசி எண்ணை பதிவு செய்த பிறகு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இணையதளத்தில் தொடங்கலாம். இணையதளத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தவுடன் கைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டும். இதன்பிறகு, கைப்பேசிக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண் (ஒடிபி) வரும். இதைப் பயன்படுத்தி உள்ளே சென்றதும், குடியிருப்போரின் விவரம் கோரப்படும்.
அதாவது, வீட்டின் உரிமையாளரா, வாடகைக்கு குடியிருப்போரா, இணைப்பு எண்ணை மாற்றாமல் இருப்பவரா எனக் கேட்கப்படும். இந்த மூன்று வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும். இதன்பின், ஆதார் எண்ணை இடைவெளியின்றி பதிவு செய்ய வேண்டும். ஆதாரில் உள்ள விவரப்படி பெயரையும் தெரிவிக்க வேண்டும்.
300 கேபி அளவுக்கு மிகாமல் ஆதார் அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை செய்த பிறகு, சரியான ஆதார் எண்ணை இணைத்திருக்கிறேன் என்ற ஆங்கில வாசகத்துக்கு எதிரே கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதன்பிறகு, விண்ணப்பம் செய்ததற்கான சான்று திரையில் தோன்றும். அதில் ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான செய்தி கைப்பேசி குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும்.