» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

இ பாஸ் விவகாரம் : தமிழக முதல்வருக்கு அதிமுக.,வினரே எதிர்ப்பு !

சனி 1, ஆகஸ்ட் 2020 10:29:12 AM (IST)

ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததால், தமிழகம் முழுவதும் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது,வேலைக்கு செல்லலாம் என்றால் இ பாஸ் கெடுபிடிகள் தடுக்கிறது என அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி.,கே.சி. பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி.,கே.சி. பழனிச்சாமி வெளியிட்ட பேஸ்புக் பதிவில், தமிழகம் முழுவதும் தற்போது 6ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இனிமேல் இ-பாஸ் வாங்க தேவை இல்லை.பொதுமக்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பது பல தரப்பிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. 

தொற்று பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கலாம். மற்றபடி ஆங்காங்கு உள்ள நிலைமைக்கு தகுந்தவாறு மாநில அரசும் ஆட்சியர்களும் முடிவுகள் எடுக்கலாம். தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனால், மத்திய அரசின் முடிவை பார்த்தபின் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று சொல்லி வந்த முதல்வர், மொத்த தமிழ்நாட்டையும் மேலும் ஒரு மாதம் முடக்கி வைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.கொரோனா தொற்று மிக பெரிய ஆபத்து என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், ஊரடங்குதான் அதற்கு தீர்வு என்பதை யாரும் நம்பவில்லை. ஊரடங்குதான் தீர்வு என்றால், இந்த நாலரை மாதத்தில் கொரோனா முழுவதுமாக ஒழிந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மட்டுமே வழியல்ல என மருத்துவகுழுவும் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு விதிகளை மக்கள் முழுமையாக பின்பற்றவில்லை. உதாரணமாக, முக கவசம் அணிவதிலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதிலும் மக்கள் அலட்சியமாக நடக்கின்றனர் என்று அரசு சொல்கிறது. இது முழு உண்மை அல்ல. பெரும்பாலான மக்கள் இந்த விதிகளை முழுமையாக பின்பற்றுகின்றனர். ஒரு சிலர் மட்டும்தான் விதிகளை அப்பட்டமாக மீறி நடக்கின்றனர். 

கரோனா நோய் வராமலே மரணம் வந்து விடுமோ என்று பீதி அடையும் அளவுக்கு ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. வேலைகள் பறி போகின்றன. ஊதியம் குறைக்கப்படுகிறது. அனைத்தையும் தாங்கி கொண்டு வேலைக்கு போகலாம் என்று புறப்பட்டால் இ-பாஸ் கெடுபிடி தடுக்கிறது. அன்றாடம் உழைத்து சம்பாதிப்பவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. பணக்காரர்கள், அரசு சம்பளம் வாங்குபவர்கள் தவிர மற்ற பிரிவுகளை சேர்ந்த மக்களின் வாழும் உரிமையே கேள்விக்குறியாகி நிற்கிறது. 

அரசுக்கு வருமானம் வருகிற வழிகளும் அடைபட்டு கிடக்கின்றன. வரிகள் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருமானம் அடியோடு சரிந்து விட்டது.  ஜிஎஸ்டி வருமானத்தில் மத்திய அரசு கொடுத்து வந்த பங்கு கொரோனாவால் நிலுவையில் இருக்கிறது. அதில் ஒரு பகுதியை கொடுத்த மத்திய அரசு, மீதியை கொடுக்க முடியுமா என்பதை இப்போது சொல்ல இயலாது என்கிறது. கொரோனா போருக்காகவே அவசரமாக நியமிக்கப்பட்ட பல பிரிவு ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவே அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். 

தடைகளை ரத்து செய்து விட்டு, விதிகளை தயவு தாட்சண்யம் பாராமல் கடுமையாக அமல்படுத்த வேண்டியதுதான் அரசு செய்ய வேண்டிய வேலை.உயிர் பாதுகாப்பு தவிர வேறு எந்த தேவைகளும் இல்லாத ஒரு சிறு பிரிவின் ஆலோசனையை கேட்டு முடிவுகள் எடுத்தால், அடுத்த ஆண்டு தேர்தலில் அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க நேரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

அருண்Aug 9, 2020 - 06:32:20 AM | Posted IP 117.2*****

நேர கட்டுப்பாடு மற்றும் வார ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்துவது நல்லது. நன்றி

NajeebAug 1, 2020 - 11:49:07 AM | Posted IP 157.5*****

100% true

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Thalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory