» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; ஆளுநர் ஒப்புதல்

புதன் 26, ஆகஸ்ட் 2026 12:41:25 PM (IST)

GovernorRVarlekar.jpg

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீதம் இடங்களை தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர் அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல் இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.

இந்த சூழ்நிலையில் சென்னை ஐகோர்ட்டு, ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது. இதை தெளிவுப்படுத்தவும் கடந்த 2010 செப்டம்பர் 7-ம் தேதிக்கு பின் இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:

புதிய நியமனங்களுக்கு மட்டுமே பொருந்துதல்: 2010 செப்டம்பர் 7-க்குப் பின் இதுவரை தமிழ் வழி முன்னுரிமை மூலம் பணியில் சேர்ந்தவர்களின் பணி நியமனம் செல்லுபடியாகும். இனிவரும் புதிய பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் பொருந்தும்.

முழுமையான தமிழ் வழிப் படிப்பு: 1-ஆம் வகுப்பு முதல் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியிலேயே பயின்றிருக்க வேண்டும். பிற மொழிகளில் படித்துவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு முன்னுரிமை கிடையாது.

விதிவிலக்குகள்: RTE சட்டத்தின் கீழ் நேரடியாக 2 முதல் 8-ஆம் வகுப்புகளில் சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்துப் பின்னர் தமிழ்நாட்டில் தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் தகுதி உடையவர்கள்.

சான்றிதழ் கட்டாயம்: பயின்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் "தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்" (PSTM Certificate) பெறுவது அவசியம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory