» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் 16 பேர் மீது புகார்; 6 பேர் மட்டுமே சேர்ப்பு: தாயார் ஆனந்தி ஆதங்கம்!

புதன் 26, ஆகஸ்ட் 2026 10:41:02 AM (IST)

AkashManamadurai.jpg

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ண ராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிஷன். கடந்த மார்ச் 5-ம் தேதி இரவு மானாமதுரை சீயோன் நகரில் ஏற்பட்ட தகராறில் இருவரை வெட்டிய வழக்கில் ஆகாஷ் டெலிஷனை போலீசார் கைது செய்தனர். அப்போது காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கு, கைது செய்யச் சென்றபோது தப்பிக்க முயன்று பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் தாக்கியதில்தான் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

மேலும், பிரேதப் பரிசோதனையில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திலீபன் உட்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்த விவரம் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் மதுரை நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் நகல் தற்போது ஆகாஷ் டெலிஷன் குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஆகாஷ் டெலிஷனை போலீசார் மானாமதுரை அருகே யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். 

அவரது வலது காலில் முழங்காலுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் கணுக்காலுக்கு மேல் பகுதியில் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டு ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்தார். மேலும், தாக்கிய இரும்புக் கம்பியை மறைத்து வைத்துவிட்டு, போலீசாரிடமிருந்து தப்பிச் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்ததாகத் தவறான தகவலை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 68 நாட்களுக்குப் பிறகே நகல் வழங்கியதாகவும், அதிலும் 12 பக்கங்கள் மட்டுமே இருப்பதாகவும், விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் ஆகாஷ் டெலிஷன் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து ஆகாஷ் டெலிஷனின் தாயார் ஆனந்தி கூறியதாவது: "முதலில் பாலத்திலிருந்து குதித்ததால்தான் கால்டைந்ததாகப் போலீசார் பொய் தகவலைத் தெரிவித்தனர். தற்போது இரும்புக் கம்பியால் தாக்கியதில்தான் என் மகன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 16 பேர் மீது புகார் அளித்தோம். ஆனால், 6 பேரை மட்டுமே வழக்கில் சேர்த்துள்ளனர். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனைத் தாக்கிய அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory