» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது; மீறினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:52:31 PM (IST)
தமிழ்நாட்டில் அரசு உரிய கொள்கை முடிவை எடுக்கும் வரை பைக் டாக்சிகளை இயக்குவதற்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் தொடர்ந்து அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். நவீன்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வசதியாகவும் உள்ளன.
ஆனால், மாநில அரசு இதற்கெனத் தெளிவான விதிகளை வகுக்காததால், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். பைக் டாக்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாமல், ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது.
எனவே, மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்ட வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு பைக் டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை (Motor Vehicle Aggregator Guidelines) உடனடியாக உருவாக்க வேண்டும்." எனத் தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில்:
இம்மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில் பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப் போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் 'கும்டா' (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதனைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயணத்தின் போது விபத்து ஏதும் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது" எனக் குறிப்பிட்டனர்.
மேலும், பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மனுதாரர் தரப்பில் மத்திய அரசு சட்டப்படி பைக் டாக்சிகளுக்கு அனுமதி உள்ளதாக வாதிக்கப்பட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரி பார்த்திபன் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:12:06 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)







