» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

சங்கரன்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், முக்கியத் திருவிழாவான ஆடித்தபசு காட்சி நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் தபசு திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித் தபசு காட்சி அளிக்கும் நிகழ்வு 11-ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்குக் கும்பபிஷேகம், சந்திரமவுலீஸ்வரர், உற்சவமூர்த்திக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
மதியம் 12:45 மணிக்கு அம்பாள் தங்கச் சப்பரத்தில் தெற்கு ரதவீதியில் உள்ள ஆடித் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்குச் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்குப் புறப்பட்டு, மாலை 6 மணிக்குக் காட்சி கொடுக்கும் பந்தலை வந்தடைந்தார்.
தொடர்ந்து தபசு மண்டபத்தில் வீற்றிருந்த கோமதி அம்பாள் மாலை 6:25 மணிக்குக் காட்சி கொடுக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார். சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வருதல் மற்றும் மாலை மாற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது விவசாயிகள் தங்கள் விளைச்சலில் கிடைத்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட பொருட்களைச் சுவாமி-அம்பாள் வீதியுலா வந்த சப்பரத்தின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலை 6:51 மணிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்குச் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "சங்கரா... நாராயணா..." எனப் பக்திகோஷங்களை எழுப்பித் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன.
இரவு 11 மணிக்குச் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நிகழ்வும், நள்ளிரவு 11:45 மணிக்கு யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்குக் காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றன. இத்திருவிழாவில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் கூடுதல் துணைச் கண்காணிப்பாளர்கள் ஜூலியஸ் சீசர், சங்கர், துணைச் கண்காணிப்பாளர்கள் செங்குட்டு வேலவன், நமச்சிவாயம், சுதிர் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருவிழாிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், மண்டகப்படிதாரர்களும் இணைந்து செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








