» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களை நேரில் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்? செந்தில் பாலாஜி பதிலடி!

வெள்ளி 10, ஜூலை 2026 5:29:09 PM (IST)

கரூர் துயர சம்பவத்தில் மக்களை நேரில் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி எக்ஸ் தளப் பதிவின் மூலம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். 

கரூர் அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிக்காரர் ஓடிவிட்டார்; அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாகத் தாக்கினார். மேலும், தனது உரையின் போது "ஓடு ஓடு ஓடு... வரான் பாரு வேட்டைக்காரன்" என்ற திரைப்படப் பாடலைப் பாடி திமுக தரப்பைக் கிண்டல் செய்தார். 

முதலமைச்சரின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட கரூர் மக்களுக்காகக் களத்தில் நின்று காப்பாற்றியது யார் என்பதை மக்கள் அறிவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அச்சம்பவம் நிகழ்ந்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மக்களின் உயிரைக் காத்துத் துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி Stalin மட்டுமே என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், மேடையிலிருந்து தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல் தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பலர் இச்சம்பவத்தால் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறி, முதலமைச்சரின் விமர்சனத்திற்கு "ஓடு.. ஓடு.. ஓடு..." என அதே பாணியில் செந்தில் பாலாஜி தனது பதிவை நிறைவு செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory