» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!

புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)


வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாணவ - மாணவியர் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மற்றும் பேரணியினை திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  இரா. சுகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்வில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ராதாபுரம் தொகுதி: வடக்குகளம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே கோலப் போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டது. மேலும், தேர்தல் நாள் குறித்தும், புகார்களைத் தெரிவிக்க உதவும் 'சி-விஜில்' (cVIGIL) செயலி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாங்குநேரி தொகுதி: களக்காடு நகராட்சிப் பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) மாணவ - மாணவியர் என மொத்தம் 500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களின் சிலம்பக் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருநெல்வேலி தொகுதி: தச்சநல்லூர், மானூர் மற்றும் நாஞ்சான்குளம் ஆகிய கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் VVPAT கருவி மூலம் வாக்களிக்கும் முறை குறித்துப் பொதுமக்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. சரவணன், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் புதுமையான போட்டிகள் மூலம் வாக்காளர்களிடையே ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory