» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் 4 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திங்கள் 22, ஏப்ரல் 2024 12:47:53 PM (IST)

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே உக்கிரம் அதிகரித்து வருவதால், மக்கள் அவதிப்படுகிறார்கள். வரும் 4 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலையில் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது. மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் முந்தைய கணிப்பில், ஏப்ரல்-ஜூன் இடையேயான காலகட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகரித்து காணப்படும் என்றும், தென் இந்திய பகுதிகள், மத்திய, வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீசத்தொடங்கிவிட்டது. வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பல இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து இருப்பதால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அனல் பறப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இந்த வெயிலையே தாங்க முடியவில்லை என்றால், அடுத்த (மே) மாதம் தொடங்கும் அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் எழத்தொடங்கிவிட்டது.

வழக்கமாக ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும். அதாவது, சித்திரை மாதம் தொடக்கத்தில் வெப்ப அளவு அதிகரிப்பதை உணர முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தைவிட முன்கூட்டியே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் வாடி போய் இருக்கிறார்கள்.

எப்போதும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டோ மார்ச் மாதத்தில் இருந்தே பல இடங்களில் வெயில் சதம் அடிக்க தொடங்கிவிட்டது.

அதிலும் குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, மதுரை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்த தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.

‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரி வெப்ப அளவு தொட்டுவிடும் நிலை இருக்கிறது.

கத்தரி வெயில் என்ற வார்த்தை வானிலை ஆய்வு மையத்தால் சுட்டிக்காட்டப்படவில்லை என்றாலும், பஞ்சாங்கம் அடிப்படையில் இந்த கணிப்பு இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கத்தரி வெயில் (அக்னி நட்சத்திரம்) அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்க உள்ளது.

இந்த காலகட்டங்களில் எப்போதும் வெயிலின் கோர முகத்தை நாம் பார்க்க முடியும். ஓரிரு இடங்களில் 110 டிகிரிக்கு மேலும், சில இடங்களில் 105 டிகிரியை தாண்டியும் வெயில் பதிவாகும். இதுவரை கத்தரி வெயில் காலத்தில் கடந்த ஆண்டு (2023) மே மாதத்தில் அரக்கோணத்தில் 115 டிகிரி வெயில் பதிவானதுதான் அதிகபட்ச வெயில் பதிவாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கத்தரி வெயிலின் உச்சகட்ட வெப்பத்தை உணர நேரிடும் என்றே சொல்லப்படுகிறது.

‘எல் நினோ’ தாக்கத்தால், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு சராசரியைவிட அதிக அளவில் வெப்பநிலையை கொண்டு வருவதன் காரணமாகவும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், விரைவான நகரமயமாக்கல் போன்றவை காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

‘எல் நினோ’ முடியப்போகும் காலகட்டத்தில் வருகின்ற கோடை காலம் அதிக வெப்பமாகவே இருக்கும். அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாக இருந்தது. அதேபோல், இந்த ஆண்டிலும் ‘எல் நினோ’ முடியப்போகும் தருவாயில் இருப்பதால், இந்த கோடைகாலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதற்கேற்றாற்போல், தமிழ்நாட்டில் நேற்றும் சென்னை, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107.96 டிகிரி வெயில் பதிவானது. சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்திருந்ததை பார்க்க முடிந்தது.

இதுதவிர இன்று (திங்கட்கிழமை) முதல் 25-ந் தேதி வரை 4 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன் பின்னரும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அப்போது வெப்ப அலை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேசமயம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் விவசாயத்திலும் இதன் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?

வெயிலின் பாதிப்பால், பள்ளிக்கூட திறப்பும் தள்ளிப்போக வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிவு ஜூன் 4-ந் தேதி வெளியாகும் நிலையில், பள்ளி திறப்பு என்பது ஜூன் 6-ந் தேதி ஆக இருக்கக்கூடும் என சொல்லப்படும் நிலையில், அந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வெயிலின் கொடுமையால், அம்மை உள்ளிட்ட கோடை கால நோய்களின் பாதிப்பும் இருந்து வருகிறது. அதில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

‘எல் நினோ’ தாக்கம் முடிவடையும்போது வரும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படும் அதே வேளையில், அந்த காலகட்டங்களில் பெய்யக்கூடிய கோடை மழையும் குறைவாகவே பெய்யும் எனவும், மே மாதத்துக்கு பிறகு, மழை அதிகரித்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கம் வருகிற ஆகஸ்டு மாதம் வரையில் ஓரளவுக்கு உணர முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory