» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரம்!!

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:12:22 AM (IST)



கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து தமிழக எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் தமிழக- கேரளா எல்லை பகுதியான புளியரை வாகன சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தற்போது சோதனை சாவடி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பிறகு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோழிகளை கேரளாவில் இறக்கிவிட்டு மீண்டும் தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் முறையான சுத்தமின்றி உள்ளே நுழைந்தால் அந்த வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கை புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் எனவும், பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory