» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் முடிந்துவிட்டாலும் தமிழக அரசு செயல்பாட்டில் தொடரும் கட்டுப்பாடுகள்

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:10:24 AM (IST)

தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும் தமிழக அரசின் செயல்பாட்டில் தேர்தல் நடத்தை விதிகளின் கட்டுப்பாடுகள் தொடரும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 16-ந்தேதி இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. எனவே மார்ச் 16-ந்தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்தன. நாடாளுமன்றத்துக்கான 7 கட்ட தேர்தலும் நிறைவடைந்து, வரும் ஜூன் 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை, அரசு வாகனங்களை அமைச்சர்கள் அலுவலக காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அலுவல்களில் ஈடுபடவில்லை. அரசியல் காரணங்களுக்காக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் முதல்கட்டமாக தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்து முடிந்துள்ளது. எனவே இனிமேல் தமிழகத்தில் வழக்கம்போல் முதல்-அமைச்சர், அமைச்சர்களின் செயல்பட முடியுமா? அல்லது, அவர்கள் புதிய அறிவிப்புகள், அரசாணைகள் போன்றவற்றை வெளியிட கட்டுப்பாடு தொடருமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்து தேர்தல் கமிஷனர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும் மற்ற இடங்களில் இன்னும் நடைபெற வேண்டியதுள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தங்களின் அலுவலகங்களுக்கு வந்து செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அரசு வாகனங்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. வீட்டில் இருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் செல்வதற்கு மட்டுமே அரசு வாகனங்களை அவர்கள் பயன்படுத்த முடியும். மற்ற இடங்களுக்கு செல்வதற்கு அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது.

அதுபோல் தமிழக மக்களுக்கு தேவையான செய்திக் குறிப்புகள், அரசாணைகளை அரசு பிறப்பிக்க முடியும். ஆனால் அவை, தேர்தல் கமிஷனின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு, தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே வெளியிட முடியும். ஏனென்றால் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கான தடை நீடிக்கிறது. எனவே இங்கு தேர்தல் நடந்து முடிந்தாலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரைக்கும் இன்னும் 45 நாட்கள் தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலில் இருக்கும். அதற்கான கட்டுப்பாடுகளும் அதுவரை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory