» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ஆட்சியர் கார்த்திகேயன்

வியாழன் 18, ஏப்ரல் 2024 4:02:08 PM (IST)



திருநெல்வேலி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மக்களவை பொதுத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு தச்சநல்லூர் மண்டல அலுவலகத்திலிருந்து 270 வாக்குச்சாவடி மையத்திற்கு EVM மிஷின் மற்றும் VVPAT கருவிகள் அனுப்பும் பணியினை இன்று (18.04.2024) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி 38-திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1810 வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது. 8,46,225 பெண் வாக்காளர்கள், 8,08,127 ஆண் வாக்காளர்கள், 151 மூன்றாம் பாலினத்தவர்கள் என 16,54,261 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 22,086, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 23,635 மற்றும் முப்படை வீரர்கள் 1762 நபர்கள்.

தேர்தல் பணியில் 9041 அலுவலர்கள், 5021 காவல்துறையினர் மற்றும் 7 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தமுள்ள 1810 வாக்குச்சாவடிகளில் 331 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அவற்றில் 205 நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 1175 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு நேரலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. 

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களை கண்காணித்து வாக்குப்பதிவு எவ்வித இடையூறு இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெறுவதை கண்காணித்திட 152 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்களின் வாகனங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும் GPS மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும். 

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 3434 நபர்கள் தபால் மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். திருநெல்வேலி தொகுதி மற்றும் பிற தொகுதிகளில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களிடமிருந்து 17.04.2024 வரை 3589 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு படையினரிடமிருந்து 223 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இந்த தபால் வாக்குகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 

தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் 8255 நபர்களுக்கு தேர்தல் பணிச்சான்று மூலம் பணிபுரியும் வாக்குச்சாவடிகளிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் Reserve–ல் உள்ள தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணிச்சான்று மூலம் தங்கள் வாக்குகளை செலுத்திட அருகில் உள்ள 31 வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மொத்தம் 15,55,599 (94%) வாக்களர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பூத் சிலிப் கிடைக்கபெறாதவர்கள் தேர்தல் நாளன்று அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். வாக்களிப்பதற்கு பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமில்லை. மேலும் பூத் சிலிப்பை மட்டுமே கொண்டு வாக்களிக்க இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பாஸ்போர்ட், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத்திட்ட அடையாள அட்டை, வங்கி பாஸ்புத்தகம் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் காத்திருக்க தனிஅறை திறக்கப்பட்டுள்ளது. அறை வசதி இல்லாத இடங்களில் சாமியானா அமைக்கப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்திட சக்கர நாற்காலி மற்றும் உதவிட ஒரு தன்னார்வலர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 17.04.2024 வரை 297 புகார்கள் பெறப்பட்டு அனைத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.1,15,00,922/- மதிப்பிலான பணமும், ரூ.1,50,70,146/- மதிப்பிலான பிறபொருட்களும் என மொத்தம் ரூ.2,56,71,338/-கைப்பற்றப்பட்டுள்ளது. 564 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை C-Vigil செயலி மூலமாகவோ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 8373 மூலமாகவோ பதிவு செய்யலாம். தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை நாளிதழ் மற்றும் செய்திதாள்களில் விளம்பரம் செய்யாத 6 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை சரி செய்யாத பட்சத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணைய வழிகாட்டுதழ்களின்படி வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பெறப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்படும். வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு அறைக்கு மத்திய காவல்படை (முதல் அடுக்கு), தமிழ்நாடு சிறப்பு காவல்படை (இரண்டாம் அடுக்கு), திருநெல்வேலி மாவட்ட/மாநகர காவல்துறை (மூன்றாம் அடுக்கு) என மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்படும். 

வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திலும் மற்றும் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறை மற்றும் திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மைய பாதுகாப்பு அறையிலும் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் ஜுன் 4 ஆம் தேதி வரை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் 24X7 மணி நேரமும் கண்காணிக்க தனிஅறை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் (20.04.2024) காலை 11.00 மணிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர் முன்னிலையில் அனைத்து வேட்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றிட அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.ஆய்வின் போது, பாளையங் கோட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாநகராட்சி ஆணையாளர்  தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory