» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வளர்ச்சிக்காக ரூ.10¾ லட்சம் கோடி: பாஜக பொய்க்கணக்கு... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திங்கள் 15, ஏப்ரல் 2024 8:38:58 AM (IST)

தமிழக வளர்ச்சிக்காக ரூ.10¾ லட்சம் கோடி ஒதுக்கியதாக பா.ஜனதா கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: "கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜனதா அரசு..." இது அப்பட்டமான பொய்க்கணக்கு!. இதில் 2 கூறுகள் உள்ளன. ஒன்று, மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.

அதாவது, மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. இதன்கீழ் உத்தரபிரதேசத்துக்கு ரூ.18.5 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த பா.ஜனதா அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ ரூ.5.5 லட்சம் கோடி மட்டுமே.

மற்றொன்று, மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பா.ஜனதா காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?. இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.1,960 கோடி, ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப் பணிகளுக்கு ரூ.63,246 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி என்று ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பா.ஜனதா அரசு.

இந்தத் திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பா.ஜனதா மந்திரிகளாவது விளக்க முன்வருவார்களா?. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்துவிடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது.

தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ.2.5 லட்சம் கோடி கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பா.ஜனதா அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?. எங்கள் காதுகள் பாவமில்லையா!". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory